பக்கம் எண் :

பக்கம் எண்:63

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
    
     20     ஊக்க வேந்த னாக்கம் போல
           வீக்கங் கொண்டு வெம்மைய வாகி
           இலைப்பூண் டிளைக்கு மேந்திள முலையள்
           திலதஞ் சுடருந் திருமதி வாண்முகத்
           தலரெனக் கிடந்த மதரரி மழைக்கட்
     25    கதிர்வளைப் பணைத்தோட் கணங்குழைக் காதிற்
           புதுமலர்க் கோதை புனையிருங் கூந்தற
           ்பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்
 
           (இதுவுமது)
     20 - 27 ; ஊக்க,..,..,..கோமகள்
 
(பொழிப்புரை) ஆள்வினையின்கண் மடிதலின்றிப் பெரிதும்
  மனக்  கிளர்ச்சியையுடைய  மன்னனுடைய  பொருட்பெருக்கம்
  போன்று  பெருத்து  வெப்பமுடையனவாகி,  இலைத்தொழிலமைந்த
  அணிகலன்கள் தழுவா நின்ற ஏந்திய இளமையுடைய முலைகளை
  யுடையவளும் திலகம் ஒளிருகின்ற அழகிய திங்கள் போன்ற ஒளி
  படைத்த முகத்தின்கண்ணே செந்தாமரை மலர்கள்போன்று
  அமைந்துகிடந்த மதர்த்த செவ்வரிபரந்த குளிர்ந்த விழிகளையும்
  ஒளிவீசும் வளையணிந்த பருத்த தோள்களையும் கனவிய
  குழையணிந்த செவிகளையும், புதிய மலர்மாலையணிந்த கரிய
  கூந்தலையும் உடையவளும் ஆகிய பதுமாபதி என்னும் பசிய
  குறுந்தொடியணிந்த இறைமகள் என்க.
 
(விளக்கம்) ஊக்கம் - மனக் கிளர்ச்சி. ''ஆக்கம்
  அதர்வினாய்ச்செல்லும் அசைவிலா, வூக்க முடையா னுழை''
  என்னும் அருமைத் திருக்குறளையும் (594) ஈண்டு நினைக.
  இலைப்பூண் - இலைபோன்ற உருவம் அமைத்த  அணிகலன்,
  திலதம் - நெற்றிச்சுட்டி ; பொட்டுமாம்; அலர் - மலர்.
  செந்தாமரை மலர் என்க. அரி - செவ்வரி தொடி - வளை
  கழலாமைக்கு இடும் ஓரணிகலன்.