பக்கம் எண் :

பக்கம் எண்:630

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
           
   50     அன்னது மாக வதுவே யாயினும்
          திண்ணிதி னதனையுந் திறப்படப் பற்றாய்
          பின்னிது நினைக்கும் பெற்றியை யாதலின்
          ஒருபாற் பட்ட தன்றுநின் மனனெனத்
 
                   (இதுவுமது)
           50 - 53 : அன்னதும்.............மனனென
 
(பொழிப்புரை) "வேந்தே ! அச் செயல் நேரிய செயலாகவே ஆக! அச் செயலைத்தானும் திட்பமாக ஆற்றலொடு பற்றி நிற்பாயும் அல்லை. அதனையுந் துவர மறந்து பின்னர் இதனை நினைக்கின்ற தன்மையை யுடையை ஆகின்றாய். இங்ஙனமாகலின் நின்னெஞ்சம் ஒரு கூற்றிலேயே நிலைத்து நிற்கும் உறுதியுடைய தொன்றன்று காண்!"
 
(விளக்கம்)  இப்பகுதியின்கண் அமைச்சனும் நண்பனுமாகிய வயந்தக குமரன் மன்னனை மேற்சென்றிடிக்கும் செயலை நினைந்து மகிழ்க.

  "நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
   மேற்சென் றிடித்தற் பொருட்டு"   (குறள். 784)

என வரும் குறளையும், "தம்முயிர்க் குறுதியெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்" (கம்ப. மந்திர. 9) எனவரும் கம்பநாடர் மொழியையும் நினைக. அன்னதும் ஆக - வாசவதத்தையை மறந்து பதுமாபதியைக் காமுற்றது முறையே என்று நீ கொள்ளுமிடத்து அது முறையேயாயினும் ஆகுக என்றவாறு. அதனையும் - அக்காதலையும். திறப்பட - உறுதியாக. இது - இவ்வாசவதத்தைக் காதலை.