| (விளக்கம்) இப்பகுதியில்
உதயணன் தன்னை இடித்துரைக்கும் வயந்தகன் சுடுசொல்லைப் பொறுத்துக் கோடலும், ஒருவாறு
தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பொருத்தமாக மறுமொழி கூறுதலும் அம்மன்னன் மாண்பினைப்
பலபடி உயர்த்திக் காட்டுதல் காண்க. ஈண்டு,
"இடிக்குந் துணையாரை யாள்வாரை
யாரே கெடுக்குந் தகைமை யவர்"
என்றற்றொடக்கத்துத் திருக்குறள்களும்,
"செவிகைப்பச் சொற்பொறுக்கும்
பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு"
என்னும் குறளும் நினைவிற்கு வருகின்றன. திரு -
திருமகள். தெரிந்து - ஆராய்ந்து. வடுஆழ் கூந்தல் - வகிர்ந்த கோடு ஆழ்ந்து கிடக்குங்
கூந்தல். இடை : வேற்றுமை. அவளே இவள் - அவ்வாசவதத்தையே பதுமாபதி. பால் வகைவினை -
ஊழ்வினை. யாவர்க்காயினும் - எத்தகைய சான்றோர்க்கும். மேவர - பொருத்தமுண்டாக.
மீட்டும் வயந்தகன் கூறுவான் என்க.
|