பக்கம் எண் :

பக்கம் எண்:632

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         அறியா னிவனென னெறியிற் கேண்மதி
         அன்றுநாங் கண்ட வரும்பெற லந்தணன்
         இன்றுநாங் காண விந்நகர் வந்தனன்
  65     மானேர் நோக்கி மாறிப் பிறந்துழித்
         தானே யாகத் தருகுவெ னென்றனன்
         பனிமலர்க் கோதைப் பதுமையை நீங்கித்
         தனியை யாகித் தங்குதல் பொருளெனக்
 
                  (வயந்தகன் கூற்று)
           62 - 68 : அறியான்...........பொருளென
 
(பொழிப்புரை) "வேந்தே! இவன் அறிந்திலன் என்று நினையாதே கொள்! முறைமையாக யான் கூறுமிதனைக் கேட்டருளுக! பண்டு நாம் இராசகிரிய நகரத்தின் புறத்தே கண்ட பெறுதற்கரிய அந்தணனாகிய காகதுண்டக முனிவன் இற்றை நாள் யாமெல்லாம் எளிதிற் காணும்படி இந்தக் கோசம்பி நகரத்தின்கண் வந்திருக்கின்றனன். மான்போலும் பார்வையையுடைய வாசவதத்தையார் மாறிப் பிறந்த இடத்தினின்றும் மீட்டு அவ்வாசவதத்தை வடிவத்தோடேயே வழங்குவேன் என்று கூறினன். ஆதலால் அக் கோப்பெருந்தேவியை நீ பெறுந்துணையும் குளிர்ந்த மலர்மாலையை யணிந்த பதுமாபதியாரைப் பிரிந்து தனித்துத் தங்குதல் இப்பொழுது நீ செய்யத்தகுந்த காரியமாகும்" என்று கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்)  இவன் அறிவில்லாமல் பிதற்றுகின்றான் என்று நினைத்துக் கேளாது விடல் வேண்டா என்பான் அறியான் இவன் எனல் என்றான். எனல் : அல் ஈற்று வியங்கோள்; என்று நினையாதே கொள் என்க. கேண்மதி : மதி ; முன்னிலையசை, அன்று என்றது முன்பு இராச கிரியத்தில் இருந்த காலத்தை. அந்தணன் : காக துண்டக முனிவன். இந்நகர் - இக்கோசம்பி நகரத்தில். தானேயாக - அவ்வாசவதத்தை வடிவத்தோடேயே. பதுமை: பதுமாபதி. பொருள் - செய்தற்குரிய காரியம்.