பக்கம் எண் :

பக்கம் எண்:633

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         கேட்டே யுவந்து வேட்டவன் விரும்பி
  70     மாற்று மன்னரை மருங்கறக் கெடுப்பதோர்
         ஆற்றற் சூழ்ச்சி யருமறை யுண்டெனத்
         தேவி முதலா யாவிரு மகன்மினென்
         றாய்மணி மாடத் தவ்விடத் தகன்று
         திருமணக் கிழமைப் பெருமக ளுறையும்
  75     பள்ளிப் பேரறை யுள்விளக் குறீஇ
 
        (உதயணன் பதுமாபதி முதலியோரை வஞ்சகமாகப் பேசித்
தன்பால் நின்றும் போக்கித் தனியே சென்று துயிலுதல்)
               69 - 75: கேட்டே...........உறீஇ
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன் மகிழ்ந்து பெரிதும் விருப்பமுடையனாய் வாசவதத்தையைக் காண்டற்கு அவாவிப் பதுமாபதியை நோக்கி, "தேவீ! யான் நம் பகைமன்னர்களைக் குலத்தோடு அழித்தற்குரிய போராற்றலையுடைய ஆராய்ச்சியையுடைய அரிய மறைச்செய்தி ஒன்றனை இவ்விடத்தே அமைச்சரோடிருந்து ஆராய்ந்தறிதல் வேண்டும். ஆதலின் நின்னை உள்ளிட்ட மகளிர் எல்லீரும் என்னைத் தனியே விட்டு நுங்கள் உறைவிடம் சேருங்கோள்" என்று அழகிய மணிமாடத்தையுடைய அவ்விடத்தினின்றும் தான் தனியே சென்று திருமணவுரிமையையுடைய பெருமகளாகிய அப்பதுமாபதி தன்னோடு உறைதற்குரிய பள்ளிப் பேரவையினுள் மெழுகித் தூய்தாக்குவித்து; என்க.
 
(விளக்கம்)  வேட்டவன் - அவாவியவனாய். மாற்றுமன்னர் - பகைன்னர். மருங்கு - குலம். ஆற்றல் - வலிமையுமாம். மறை - மறைச்செய்தி. உண்டு - ஆராய்தற்கிருக்கின்றது. தேவி : முன்னிலைப்புற மொழி. ஆய்மணி - அழகிய மணி. திருமணக்கிழமை - மணத்தலாலுண்டாகும் உரிமை. பெருமகள் - பதுமாபதி. விளக்குறீஇ - மெழுகித் தூய்தாக்கி. இனி விளக்கேற்றி வைத்து எனினுமாம்.