பக்கம் எண் :

பக்கம் எண்:634

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         மயிரினுந் தோலினு நூலினு மியன்ற
         பயில்பூஞ் சேக்கையுட் பலரறி வின்றி
         உழைக்கலச் சுற்றமு மொழித்தன னாகி
         விழுத்தகு வெண்டுகில் விரித்தன னுடுத்துத்
  80     தூய னாகி வாய்மொழி பயிற்றித்
         தோட்டுணை மாதரை மீட்டனை பணியென
         வாட்படை மறவன் காட்டிய வகைமேற்
         சேட்புலம் பகலச் சிந்தை நீக்கி
         வீணை கைவலத் திரீஇ விதியுளி
  85     ஆணை வேந்த னமர்ந்தனன் றுயிலென்.
 
                      (இதுவுமது)
             76 - 85 : மயிரினும்............துயிலென்
 
(பொழிப்புரை) மயிரானும் தோலானும் நூலானும் இயற்றப்பட்டு மிக்க மலர் பரப்பப்பட்ட படுக்கையின்கண் பலரும் அறியாதபடி உழைக்கலமகளிரையும் போக்கியவனாய்ச் சிறப்புடைய வெள்ளாடையை விரித்துடுத்துக் கொண்டு தூயனாய் வயந்தகனை நோக்கி, "நண்பனே! இனி நீ என் தோள் துணைவியாகிய வாசவதத்தையை மீட்டுக் கொணர்ந்து தருக" என்று திருவாய் மலர்ந்தருளி வாட்படையையுடைய சிறந்த வீரனாகிய அவ்வயந்தகன் கூறிய முறைப்படி தான் நெடுநாள் உழக்கும் தனிமைத்துயர் அகலும்படி சிந்தனையை விலக்கிக் கோடவதியினைக் கையிடத்தே வைத்துக்கொண்டு முறைப்படியே ஆணையையுடைய அவ்வேந்தர் பெருமான் தனித்துயில் கொள்வானாயினன்;  என்க.
 
(விளக்கம்)  அன்னத்தூவி முதலியன. பூஞ்சேக்கை - மலர்ப்படுக்கை. உழைக்கலச் சுற்றம் - உழைக்கல மகளிர். தூயன் - மனம் மொழி மெய் ஆகிய முக்கருவிகளாலும் தூயன் என்க. மாதரை : வாசவதத்தையை. மீட்டனை பணியென - வயந்தகனுக்கு வாய்மொழி பயிற்றி என்க. மறவன் ; வயந்தகன். சேட்புலம்பு - நீண்டகாலம் பிரிந்தமையாலிருந்த வருத்தம். கைவலத்து - கையின்கண். இரீஇ - வைத்து. விதியுளி - முறைப்படி துயிலமர்ந்தனன் : ஒருசொல்; துயின்றான்.