பக்கம் எண் :

பக்கம் எண்:635

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
          ஆணை வேந்த னமர்ந்துதுயில் பொழுதின்
          வாணுதன் மாதரை மதியுடை யமைச்சர்
          அன்பியாத் தியன்ற தன்பாற் கணவன்
          மண்பாற் செல்வ மாற்றி மற்றோர்
     5    பெண்பாற் செல்வம் பேணுத லின்மையும்
 
        (அமைச்சர் உதயணன்பால் வாசவதத்தையை விடுத்தல்)
              1 - 5 : ஆணை............இன்மையும்
 
(பொழிப்புரை) இவ்வாறு ஆணையையுடைய உதயண வேந்தன் தனித்துயில் கொண்டகாலத்தே அறிவுமிக்க உருமண்ணுவா முதலிய அமைச்சர்கள் ஒளி பொருந்திய நெற்றியையுடைய அவ்வாசவதத்தை தன்னோடு அன்புத் தொடர்புபெற்று ஆகூழால் இயன்ற தன் பகுதியிற்பட்ட கணவனாகிய உதயண மன்னன் நிலஉலகை ஆளும் இன்பத்தை நுகர்தலன்றி வேறொரு பெண்ணின்பத்தைப் பேணாதிருத்தலும்; என்க.
 
(விளக்கம்) ஆணை - கட்டளையிடுதல். வேந்தன் : உதயணன். மாதர் : வாசவதத்தை. அமைச்சர் : உருமண்ணுவா முதலியோர். உழுவலன்பினால் தொடர்பு படுத்தி ஆகூழால் கூட்டப்பட்ட தன்னுடைய பகுதியிற்பட்ட கணவன் என்க. மண்பால் செல்வம் - மண்ணுலகத்தை ஆளும் இன்பம். பெண்பாற் செல்வம் - பெண்ணிடத்து நுகரும் இன்பம்.