உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
எரிசின
மொய்ம்பிற் றரிசகன் றங்கை
பண்பொடு புணர்ந்த பதுமா
பதியையும் பொருபடை
வேந்தனை வெரீஇப்
புணர்த்த கருமக்
காம மல்ல தவண்மாட் 10
டொருமையி னோடாது புலம்பு முள்ளமும்
இரவும் பகலு மவண்மாட்
டியன்ற பருவர
னோயோ டரற்றும் படியும்
இன்னவை பிறவு நன்னுத றேற
|
|
(இதுவுமது)
6 - 13 : எரி..........தேற
|
|
(பொழிப்புரை) தீப்போன்று எரிகின்ற சினத்தையும் ஆற்றலையுமுடைய தருசகமன்னனுடைய தங்கையும்,
நற்பண்புகளோடு பொருந்தியவளும் ஆகிய பதுமாபதி நங்கையைத் தானும் அவ்வுதயணன் காமுற்றது
போர் செய்கின்ற படைமிக்க பகை மன்னனாகிய ஆருணிக்கு அஞ்சித் துணைவலி பெறுதற்
பொருட்டுத் தருசக மன்னனோடு கேண்மை கொள்ளுதற்குக் கருதி மேற்கொண்ட கருமநுதலிய
கள்ளக் காமம் ஆதலன்றி அவளிடத்தும் ஒருமுனைப்பட்டுச் செல்லாமல் தன்னையே நினைந்து
புலம்பாநின்ற நெஞ்சமுடைமையும் இரவும் பகலும் அவ்வாசவதத்தையின்பால் உண்டான பிரிவுத்
துன்பத்தாலே வருந்திப் புலம்பாநின்ற தன்மையையும் இவைபோன்ற பிற நிகழ்ச்சிகளையும்
நல்ல நெற்றியையுடைய அவ்வாசவதத்தை தானே கண்கூடாகக் கண்டு தெளிந்து கொள்ளும்
பொருட்டு; என்க.
|
|
(விளக்கம்) எரிசினம் : வினைத்தொகை; உவமத்தொகையுமாம்.
மொய்ம்பு - வலிமை. பண்பு - குலமகளிர்க்குரிய நற்குணங்கள். வேந்தனை - ஆருணியை. கருமக்
காமம் - காரியத்தின் பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம். 'கருமநுதலிய
கள்ளக்காமம்' (1. 35: 228.) என்றார் முன்னும். அவள்மாட்டு (9) -
பதுமாபதியின்பால். அவன் மாட்டு (11) - வாசவதத்தையின்பால் பருவரல் நோய் -
துன்பமாகிய காமப்பிணி. படி - தன்மை. நன்னுதல் :
வாசவதத்தை.
|