உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
மாமணித்
தடக்கை மருங்கிற்
றாழ்தரத் தன்பாற்
பட்ட வன்பின னாகிக் 20 கரண நல்லியாழ்
காட்டுங் காலை மரணம்
பயக்கு மதர்வைத் தாயநின்
கடைக்க ணோக்கம் படைப்புண்
ணகவயின் அழனெய்
பெய்தென் றாற்றே னென்னை
மழலையங் கிளவி மறந்தனை யோவென 25
வாய்சோர்ந் தரற்றா வாசங் கமழும்
ஆய்பூந் தட்டத் தகத்தோடு
தெற்றிய தாமம் வாட்டுங்
காம வுயிர்ப்பினன் கனவி
னினையுங் கணவனைக் கண்டே
|
|
(உதயணனுடைய
நிலை) 18 -
28 : மாமணி.........கண்டே
|
|
(பொழிப்புரை) அவ்வறையின்கண் சிறந்த அழகுடைய பெரிய தன் கைகள் பக்கத்தே வாளா தாழ்ந்து கிடப்பத்
தன்பால் பொருந்திய அன்பையுடையனாகித் திருவாய் திறந்து, 'கரணங்களையுடைய நல்ல
யாழினை, வாசவதத்தாய்! யான் நினக்குக் கற்பிக்குங் காலத்தே எனக்குச் சாக்காட்டைத்
தருதற்குக் காரணமான மதர்ப்பினையுடையதாய் நின்னுடைய கடைக்கண் நோக்கம் எனக்குப்
படைக்கலம்பட்ட பழம்புண்ணினூடே சுடுகின்ற மருந்தெண்ணெயைப் பெய்ததுபோல வருத்தா
நிற்றலால் ஆற்றாது வருந்தினேன், நீ உடனிருக்கவும் அங்ஙனம் வருந்துகின்ற என்னை
மழலைமாறாத அழகிய மொழிகளையுடைய நங்காய்! நீ மறந்தொழிந்தாயோ' என்று
வாய்விட்டுக் கூறிப் புலம்பா நின்ற அழகிய பூந்தட்டின்கண் தன் பக்கத்தே வைக்கப்பட்ட
அகவிதழால் புனைந்த மலர்மாலையைக் கரியச் செய்கின்ற வெப்பமுடைய காம உயிர்ப்பினை
உடையனாய்க் கனவினிடத்தும் தன்னையே நினைந்து அரற்றா நின்ற அக்கணவனை அந்நங்கை
கண்கூடாகக் கண்டு; என்க.
|
|
(விளக்கம்) மாமணி - சிறந்த மணியாழியுமாம். தடக்கை -
பெரிய கை. கரணம் - யாழ்க்கரணம். யாழ் - கோடவதி. மதர் வைத்து -
மதர்ப்பினையுடையது. படைப்புண் - படைக்கலம் பட்டதனாலாய புண். அழல் நெய் :
வினைத்தொகை; சுடுகின்ற மருந்து நெய். வாய் சோர்ந்து - வாய்விட்டுப் பிதற்றி.
பூந்தட்டத்து - மலர்வைக்கப்பட்ட தட்டங்களில். தெற்றிய - புனைந்த. தாமம் - மாலை.
காம உயிர்ப்பு - காமப்பிணியாலுண்டாகிய
வெய்துயிர்ப்பு.
|