பக்கம் எண் :

பக்கம் எண்:642

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           வாசவ தத்தாய் வந்தனை யோவெனக்
           கூந்தன் முதலாப் பூம்புற நீவி
           ஆய்ந்த திண்டோ ளாகத் தசைஇ
           என்வயி னினையா தேதிலை போல
     50    நன்னுதன் மடவோய் நாள்பல கழிய
           ஆற்றிய வாறெனக் கறியக் கூறென
 
              (உதயணனுடைய செயல்)
             46 - 51 : வாசவ.........கூறென
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் துயில் மயக்கத்தோடே,  ''வாசவதத்தாய்! நீ வந்து விட்டாயோ'' என்று கூறிக்கொண்டு அவளுடைய கூந்தலையும் அழகிய முதுகையும் கையாற்றடவி மெலிந்த தனது திண்ணிய தோளை அவள் மார்பிற் சாத்தி, ''நல்ல நெற்றியையுடைய நங்காய் ! நீ என்னைப் பிரிந்து நாள்கள் பல கழியாநிற்பவும் என்னை நினையாமல் அயலாள் போன்று பிரிவுத் துன்பத்தை எவ்வாறு ஆற்றி யிருந்தனை ? அதனை யான் அறியும்படி கூறுவாயாக என்று வினவாநிற்ப; என்க.
 
(விளக்கம்) பூம்புறம் - அழகிய முதுகு. ஆய்ந்த - மெலிந்த. ஆகம் - மார்பு. அசைஇ - சாத்தி. என்வயின் - என்னை. ஏதிலை போல - அயலாள் போல.