உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
எரியகப்
பட்டோ ரியற்கை யிதுவோ
தெரியே னெனக்கிது தெரியக்
கூறென ஆனா
வுவகையொ டவண்மெய் தீண்டியும் 65
தேனார் படலைத் திருவளர்
மார்பன்
கனவென வறியான் காதலின்
மறுத்தும்
சினமலி நெடுங்கண் சேர்த்திய பொழுதின்
|
|
(இதுவுமது) 62
- 67 : எரி............பொழுதின்
|
|
(பொழிப்புரை) 'தீயின்கண் முழுகி இறந்தவர்களின் தன்மை இங்ஙனந்தான் இருக்குங்கொல் யான்
அறிகின்றிலேன் ! நீ இங்ஙனமிருத்தற்குரிய காரணத்தை யான் அறிந்து கொள்ளும்படி
கூறுவாயாக!' என்று கூறி அமையாத மகிழ்ச்சியோடே அவளது உடம்பினைக் கையால்
தீண்டியறிந்தும் தேன் பொருந்திய படலைமாலையையுடைய திருமகள் வீற்றிருக்கின்ற
மார்பினையுடைய அவ்வுதயண மன்னன் கனா நிகழ்ச்சி போல நன்கு அறியாதவனாய் அக் காதல்
மொழியோடே மீண்டும் சினமிக்க தன் நெடுங் கண்களை மூடித் துயில் கொள்ளா
நிற்கும் பொழுது; என்க.
|
|
(விளக்கம்) எரி - நெருப்பு. இது - இந்நிலைமைக்குற்ற
காரணம். அவள் : வாசவதத்தை. படலை - மலருந்தளிரும் விரவிய மாலை. திரு - திருமகள்.
கனா நிகழ்ச்சியைக் காண்பவன் நன்கு அறியாதது போல இந்நிகழ்ச்சியையும் அறியாதவனாய்
என்க. காதலின் - காதலோடே.
மறுத்தும் - மீண்டும்.
|