பக்கம் எண் :

பக்கம் எண்:648

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
          போரார் குருசில் புடைபெயர்ந் துராஅய்
    85    மறுமொழி தாராய் மடவோ யெனக்கென
          உறுவரை மார்பத் தொடுக்கிய புகுவோன்
          காணா னாகிக் கையற வெய்தி
          ஆனா வின்றுயி லனந்தர் தேறிப்
          பெருமணி பெற்ற நல்குர வாளன்
    90    அருமணி குண்டு கயத்திட் டாங்குத்
          துயிலிடைக் கண்ட துணைநலத் தேவியை
          இயல்புடை யங்க ணேற்றபிற் காணா
          தரற்று மன்னனை யருமறை நாவின்
 
            (உதயணன் விழித்து அரற்றல்)
            84 - 93: போரார்..............மன்னனை
 
(பொழிப்புரை) போராற்றல்மிக்க உதயணமன்னன் உறங்கியவன் புரண்டு நகர்ந்து ''மடப்பமுடைய நங்காய்! நீ என் வினாவிற்கு ஏதும் மறுமொழி தருகின்றிலை'' என்று கூறிக்கொண்டே அவளைத் தனது பெரிய மலைபோலும் மார்பின்கண் அடங்குமாறு தழுவ முயல்பவன் அங்கு அவளைக் காணானாய்க் கையறவு கொண்டு அமையாத இனிய துயில் மயக்கம் தெளியப்பெற்று, உயரிய மணியைப்பெற்ற ஒரு வறியோன் பெறுதற்கரிய அம்மணியை மிகவும் ஆழ்ந்த நீரையுடைய மடுவின்கண் வீழ்த்தி விட்டாற்போன்று, தான் உறங்கும்பொழுது கண்ட வாழ்க்கைத் துணைவியாகிய இன்பத்தேவியை நல்லிலக்கணம் உடைய அழகிய கண்களை விழித்துப் பார்க்கும்பொழுது காணானாய்ப் புலம்பா நின்றான். அங்ஙனம் புலம்பும் அவ்வேந்தனை; என்க.
 
(விளக்கம்) குருசில் : உதயணன். கையறவு - செயலறுதல். அனந்தர் - மயக்கம். பெருமணி - விலைமிகுந்த மணி. நல்குரவாளன் - வறியவன். அருமணி - பெறற்கரிய மணி. குண்டுகயம் - ஆழமான நீர் நிலை. உதயணன் வாசவதத்தையைக் கண்டு பின் காணானானமைக்கு வறியவன் மணிபெற்று அதனை நீர்நிலையில் வீழ்த்திவிட்டமை யுவமை. நலம் - இன்பம்; அழகுமாம். இயல்பு - நல்லிலக்கணம். மன்னன் : உதயணன்.