பக்கம் எண் :

பக்கம் எண்:649

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           தரற்று மன்னனை யருமறை நாவின்
           வயத்தகு வயந்தகன் வல்விரைந் தெய்தி
     95    இருளும் பகலு மெவ்வமொ டிரங்குதல்
           பொருளஃ தன்றே புரவலர் மாட்டெனக்
           காரணக் கிளவி கழறுவனன் காட்டத்
 
           (வயந்தகன் உதயணனிடம் கூறல்)
             93 - 97 : அருமறை...........காட்ட
 
(பொழிப்புரை) அங்ஙனம் புலம்பாநின்ற அம் மன்னன்பால் உணர்தற்கரிய மறைகளைப் பயின்ற செந்நாவினையுடைய வலிமையுடைய வயந்தகன் மிக விரைந்துவந்து 'அரசே ! உலகாள் வேந்தர் இரவும் பகலும் துன்பத்தோடே புலம்பிக்கொண்டிருத்தல் நற்செயலாகாது'' என்று காரணங்களைக் காட்டும் சொற்கள் பலவும் எடுத்துக்காட்டி இடித்துரையா நிற்ப என்க.
 
(விளக்கம்) வய - வலி. வல்விரைந்து - மிக விரைந்து. இருள் - இரவு; ஆகுபெயர். எவ்வம் - துன்பம். பொருள் - நற்செயல். புரவலர் - அரசர். காரணக்கிளவி - காரணத்தைக் காட்டு மொழி. கழறுவனன் - இடித்துரைப்ப.