பக்கம் எண் :

பக்கம் எண்:65

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
     40    இடையற வில்லாக் கடைமுத றோறும்
           கைவ லோவியர் மெய்பெற வெழுதிய
           உருவப் பூங்கொடி யொசிய வெடுத்துத்
           தெருவு மந்தியுந் தெய்வச் சதுக்கமும்
           பழமண னீக்கிப் புதுமணற் பரப்பி
     45    விண்மிசை யுலகின் விழவமைந் தாங்கு
           மண்மிசை யுலகின் மன்னிய சீர்த்தி
           முழவுமலி திருநகர் விழவுவினை தொடங்க
 
        நகரமாந்தர் விழாத் தொடங்கல்
         40 - 47 ; இடை.........தொடங்க்
 
(பொழிப்புரை) நிலவுலகத்தின்கண்  நிலைபெற்ற  சீர்த்தியையுடைய
  முழவொலிமிக்க அழகிய அவ்விராசகிரிய நகரத்துமாந்தர் மகிழ்ந்து
  இடையீடில்லாத  தத்தம்  முன்றில்தோறும்  கைத்தொழிலில்
  வல்லுநரான ஓவியர் உண்மையுருவம்  போன்று  தோன்றும்படி
  வரைந்த உருவங்களையுடைய அழகிய கொடிகளை வானத்தே நுடங்கி 
  ஆடும்படி  உயர்த்தி, தெருக்களினும்  முச்சந்திகளினும்
  தெய்வங்களையுடைய நாற்சந்திகளினும் பழைய மணலை அகற்றிப்
  புதுமணல்  கொணர்ந்து  பரப்பி  வானுலகத்தே  விழவணி 
  செய்தாற்போன்று திருவிழாச் செயலைத் தொடங்கா நிற்ப வென்க.
 
(விளக்கம்) கடைமுதல் - முற்றில். மெய்பெற - உண்மையுருவம்
  போன்று  தோன்றும்படி.   ஒசிய - நுடங்க.  அந்தி - முச்சந்தி.
  சதுக்கம் - நாற்சந்தி.  நாற்சந்திகளிலே   கோயில்கள்  இருத்தல்
  தோன்றத் தெய்வச் சதுக்கம் என்றார். சீர்த்தி - மிகுபுகழ்,
  நகர் - நகரமாந்தர்.