பக்கம் எண் :

பக்கம் எண்:650

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           தேரணி சேனைத் திறன்மீக் கூரிய
           பிடிமகிழ் யானைப் பிரச்சோ தனன்மகள்
     100    வடிமலர்த் தடங்கண் வாசவ தத்தையென்
           பள்ளிப் பேரறை பையெனப் புகுந்து
           நல்லியா ழெழீஇ நண்ணுவன ளிருப்ப
 
                 (உதயணன் கூற்று)
             98 - 102: தேர்..............இருப்ப
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் ''வருக ! வருக ! வயந்தக ! யான் என் செய்கோ ? தேரின் அணிகளைக்கொண்ட படைகளையும் போராற்றும் திறத்தையும் மிகுதியாகப் பெற்றவனும் பிடியானைகளோடு கூடிக் களியாநின்ற யானையையுடையவனும் ஆகிய பிரச்சோதன மன்னனுடைய மகளாகிய தேன்றுளும்பும் செந்தாமரை மலர்போன்ற பெரிய கண்களையுடைய வாசவதத்தை எனது பள்ளிப் பேரறையின்கண் யானறியா வண்ணம் மெல்லவந்து புகுந்து நல்ல கோடவதி யாழின் நரம்பினை வருடி இன்னிசை எழுப்பியவளாய் என்னை அணுகி இரா நிற்ப'' என்க.
 
(விளக்கம்) தேரால் அழகுற்ற சேனையுமாம். மீக்கூரிய - மிகுந்த - வடி - தேன். பையென - மெல்ல.