பக்கம் எண் :

பக்கம் எண்:651

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           வாச வெண்ணெ யின்றி மாசொடு
           பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு
     105    மணங்கமழ் நுதலு மருங்குலு நீவி
           அழிவுநனி தீர்ந்த யாக்கையே னாகிக்
           கழிபே ருவகையொடு கண்படை கொளலும்
           மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய்
           நிறுத்த லாற்றே னெஞ்ச மினியெனக்
 
                   (இதுவுமது)
              103 - 109 : வாச..........என
 
(பொழிப்புரை) ''யான் அவளுடைய நறுமண வெண்ணெயிடாமல் அழுக்கோடு பின்னிக்கிடந்த சடையினையுடைய முதுகினோடு நறுமணங் கமழும் நுதலையும் இடையையும் என் கைகளாலே தடவி நன்கு மெலிவகன்ற உடம்பினையுடையேனாகிப் பெரிதும் மகிழ்ச்சியோடு மீண்டும் துயில்கொண்டேனாக ! அவள் மீண்டும் அந்தோ ! என்னைப் பிரிந்து போயினள் காண் ! யான் என் னெஞ்சத்தை இப்பொழுது அமைதியின்கண் நிறுத்தவியலாதேன் ஆயினேன்'' என்று வருந்திக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) பிணங்குபு - பின்னலுற்று. பின்னு - சடை. புறம் - முதுகு. மருங்குல் - இடை. அழிவு - மெலிவு. ஆக்கை - உடம்பு. கழிபேருவகை - மிகவும் பெரிய மகிழ்ச்சி. கண்படை - துயில். முன்னர் வயந்தகன் கூறியபடி மனத்தை ஒருநிலையில் நிறுத்தித் துயின்றானாகலின்.  இனி அவ்வாறு நிறுத்திவைத்தல் இயலாது என்பான் இனி நெஞ்சம் நிறுத்தல் ஆற்றேன் என்றான்.