பக்கம் எண் :

பக்கம் எண்:652

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         
     110    கனவிற் கண்டது நனவி னெய்துதல்
           தேவர் வேண்டினு மிசைதல் செல்லாது
           காவ லாள கற்றோர் கேட்பிற்
           பெருநகை யிதுவெனப் பேர்த்துரை கொடாஅ
           ஆடலு நகையும் பாடலும் விரைஇ
     115    மயக்கமி றேவி வண்ணங் கொண்டோர்
           இயக்கி யுண்டீண் டுறைவதை யதற்கோர்
           காப்பமை மந்திரங் கற்றனென் யானென
           வாய்ப்பறை யறைந்து வாழ்த்துப்பல கூறி
           ஒருதலைக் கூற்றொடு திரிவில னிருப்பப்
 
                 (வயந்தகன் கூற்று)
               110 - 119 : கனவில்.........இருப்ப
 
(பொழிப்புரை) அது கேட்ட வயந்தகன் 'ாவல் வேந்தே ! தேவரே விரும்பினும் அவர் கனவிற் கண்டதொன்றனை நனவிடத்தே பெறுதல் இயலாது காண் ! நின் கூற்றினைச் சான்றோர் கேட்பினும் பெரிய நகைப்பினை உண்டாக்குமே. அது கிடக்க, அரசே கேட்டருள்க ! இப் பள்ளியறையின்கண் வினவுவார்க்கு மறுமொழி கொடாமல் ஓரியக்கி மயக்கற்ற நங் கோப்பெருந்தேவி வாசவதத்தையாரின் வடிவினை மேற்கொண்டு ஆடலும் பாடலும் கலந்தியற்றி உறையாநின்றதுகாண், அவ்வியக்கி நம்மனோரை மயக்கி இன்னா செய்யாமல் பாதுகாப்பாக அமைவதொரு மந்திரத்தை யான் ஓதியுள்ளேன்காண்'  என்று தனது வாயே பறையாகக்கொண்டு நாக்கடிப்பாக உரத்து வாழ்த்துரை பற்பல கூறி அவன் மறுமொழியை எதிர்பாராமல் தான் ஒருவனே பேசுவானாய் அப் பேச்சினின்றும் மாறுபடானாய் அவ்வயந்தகன் இருந்த பொழுதில் என்க.
 
(விளக்கம்) இசைதல் செல்லாது : ஒரு சொல்; இயையாது என்றவாறு காவலாள ! : விளி. கற்றோர் என்றது - சான்றோர் என்பதுபட நின்றது. கேட்பினும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது சான்றோர் நகைத்தல் அரிதாகலின் கற்றோர் கேட்பினும் இது நகையாம் என்றான். விரைஇ - கலந்து தேவி : வாசவதத்தை. ஈண்டு - இப் பள்ளியறையின்கண், அவ்வியக்கியே நின்னை இவ்வாறு மயக்கிற்று என்பது குறிப்பெச்சம். இயக்கி மயக்குதலுண்டென்பதனை 'மயக்குந் தெய்வம் இவ்வன் காட்டுண்டென வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தாலிவ் வஞ்சிலோதியை அறிகுவன் யானெனக் கோவல னாவிற் கூறிய மந்திரம்' எனவரும் சிலப்பதிகாரத்துங் காண்க. (11 : 192 - 6) ஒருதலைக் கூற்று - மறுமொழி பெறாமல் ஒருவனே கூறும் கூற்று. துணிவான சொல் என்பாருமுளர். தான் பேசும் நெறியிற் றிரிவிலனாய் என்க.