பக்கம் எண் :

பக்கம் எண்:653

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         
     120    பண்டே போலக் கண்படை மம்மருட்
           கண்டே னானே கனவன் றாயின்
           மாறி நீங்குமோ மடமொழி தானெனத்
           தேறியுந் தேறான் றிருவமர் மார்பன்
           நள்ளிரு ணீங்கலும் பள்ளி யெழுந்து
     125    காமர் சுற்றங் கைதொழு தேத்தத்
           தாமரைச் செங்கண் டகைபெறக் கழீஇக்
 
                (உதயணன் செயல்)
            120 - 126 : பண்டே.........கழீஇ
 
(பொழிப்புரை) இவ்வாறு வயந்தகன் வாய்ப்பறை யறைந்து கொண்டிருந்த பொழுதின் உதயண மன்னன் மெய்யே இது கனவேபோலும். பண்டுபோலவே இன்றும் யான் துயில் மயக்கத்தே இக்காட்சியைக் கண்டேன் ஆகலின், இது கனவே ஆதல் வேண்டும்; கனவன்றாயின் அவள் இங்ஙனம் மனமாறி என்னை விட்டுப் பிரிந்து போவளோ? என்று தன் னெஞ்சத்தே தெளிந்தும் தெளியானாய் மயங்கியிருந்து திருமகள் வீற்றிருக்கும் மார்பினையுடைய அவ்வுதயணன் அவ்விரவு கழிதலும் பள்ளியினின் றெழுந்து அன்புடைய சூதர் முதலிய சுற்றத்தார் கை தொழுது வாழ்த்தாநிற்பத் தனது செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களை அழகுறக் கழுவிக் காலைக்கடன் முடித்துப் பின்னர் என்க.
 
(விளக்கம்) பண்டும் யான் அவளைத் துயிலிடத்தே கனவிற் காண்டல் போன்று இன்றும் கண்படை மம்மருட் கண்டேன் என்றவாறு. மடமொழி : வாசவதத்தை. மார்பன் : உதயணன்.