பக்கம் எண் :

பக்கம் எண்:654

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           குளம்புங் கோடும் விளங்குபொன் னழுத்திச்
           சேடணி சேதா விளையன வின்னே
           கோடி முற்றிக் கொண்டனிர் வருகெனத்
     130    தெரிமலர்க் கோதைத் தேவியை யுள்ளி
           அருமறை யாளர்க் கெழுமுறை வீசி
 
                    (இதுவுமது)
             127 - 131 : குளம்பும்.........வீசி
 
(பொழிப்புரை) ஆங்குநின்ற பணியாளரை நோக்கி 'நீவிர் சென்று குளம்புகளினும் கொம்புகளினும் பொன்னழுத்திப் பெருமையுண்டாக அணிசெய்யப்பட்ட இளமையுடைய சிவப்புப் பசு பலவற்றைக் கழுத்திற் புத்தாடை சுற்றி இப்பொழுதே ஈண்டுக் கொணர்க' என்று கட்டளையிடா நிற்ப, அங்ஙனமே அப்பணியாளர் கொணர்ந்த அச்சேதாக்களை வாசவதத்தையை நினைந்து அவள்பொருட்டு அரிய மறையோதிய அந்தணாளர்க்கு ஏழு முறை வழங்கி என்க.
 
(விளக்கம்) "பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந்
   தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் -- சென்னிதன்
   மானிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த்
   தானுலக மண்ணுலகா மன்று.'

எனவரும் (தொல் - புறத் - சூ. 35, நச். மேற்.) பழம்பாடலான் அந்தணர்க்கு ஆன் வழங்கும் வழக்கத்தை யுணர்க.

சேடு - பெருமை. சேதா - சிவப்புப் பசு. கோடி - புத்தாடை. முற்றி - சுற்றி.  தேவி : வாசவதத்தை. வீசி - வழங்கி.