பக்கம் எண் :

பக்கம் எண்:656

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி
           ஆனாச் செல்வத் தந்தணன் மற்றுநாம்
           மேனா ணிகழ்ந்த மேதகு விழுமத்
     140    தறம்பொரு ளின்ப மென்ற மூன்றினும்
           சிறந்த காதலி சென்றுழித் தரூஉம்
           மகதத் தெதிர்ந்த தகுதி யாளன்
           மதுகாம் பீர வனமெனுங் காவினுட்
           புகுதந் திருந்து புணர்க்கு மின்றவட்
     145    சேறு மெழுகெனச் சிறந்தன னாகி
 
           (வயந்தகன் உதயணனிடம் கூறுதல்)
            137 - 145: வயந்தகன்.........எழுகென
 
(பொழிப்புரை) வயந்தகன் உதயண குமரனை அணுகி ''வேந்தே! நாம் பண்டு வாசவதத்தை தீயில் வெந்தாளென்ற துன்பத்தாலே மகத நாட்டிலே சென்று அங்கு அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருளினும் சிறந்த நின் காதலியாகிய வாசவதத்தை மாறிப் பிறந்த இடத்தினின்றும் மீட்டுத்தரும் வித்தையினையுடையவன் என்று கேள்வியுற்றுச் சென்று காணப்பட்ட குறையாத அருட்செல்வத்தையுடைய அந்தணனாகிய தகுதிமிக்க காகதுண்டக முனிவன் நம் பொருட்டு இற்றை நாள் நமது மதுகாம்பீரவனமென்னும் சோலையின்கண் வந்திருந்து அத்தேவியை நினக்கு வழங்காநிற்பன் ஆதலின் யாம் அச்சோலைக்குச் செல்வேம் எழுந்தருளுக !'' என்று வேண்டா நிற்ப என்க.
 
(விளக்கம்) செல்வம் - அருட்செல்வம். அந்தணன் - காகதுண்டக முனிவன். மேனாள் என்றது. அரண்மனை தீப்பற்றிய காலத்தை. விழுமம் - துன்பம். அறம் பொருள் இன்பம் மூன்றிற்கும் காரணமாய்ச் சிறத்தலால் மூன்றினுஞ் சிறந்த காதலி என்றான். சென்றுழி - மாறிப் பிறந்த விடத்தினின்றும். சேறும் - செல்வேம்.