பக்கம் எண் :

பக்கம் எண்:657

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         
     145    சேறு மெழுகெனச் சிறந்தன னாகி
           மாறா மகிழ்ச்சியொடு மன்னவன் விரும்பிக்
           கொடுஞ்சி நெடுந்தேர் கோல்கொள வேறி
           நெடுங்கொடி வீதி நீந்துபு போகி
           வித்தக வினைஞர் சித்திர மாக
     150    உறழ்படச் செய்த வொண்பூங் காவின்
           எறுழ்மிகு மொய்ம்ப னிழிந்தகம் புகவே
 
                   (உதயணன் செயல்)
            145 - 151 : சிறந்தனனாகி.........புகவே
 
(பொழிப்புரை) அச்செய்திகேட்ட உதயணமன்னன் உளஞ் சிறந்தவனாகி மாறாத மகிழ்ச்சியோடே வாசவதத்தையை அடைதலைப் பெரிதும் விரும்பிக் கொடுஞ்சியையுடைய நெடிய தேரினைப் பூட்டி வலவன் கோல் கொண்டு சமைய அத்தேரின்கண் ஏறிக்கொடியுயர்த்தப்பட்ட நெடிய வீதியினைக் கடந்து சென்று வித்தகமுடைய கலைத்தொழிலாளர் ஓவியம்போன்று தோன்றும்படி இயற்றிய ஒள்ளிய அம்மதுகாம்பீரவனம் என்னும் மலர்ச்சோலையிலே இறங்கி வலிமைமிக்க தோளையுடைய அவ்வேந்தன் அகத்தே புகாநிற்ப என்க.
 
(விளக்கம்) உளஞ்சிறந்தனனாகி என்க. உளம் - ஊக்கமென்க. கொடுஞ்சி - தேர் உறுப்பிலொன்று. பாகன் கோல்கொள என்க. நெடுவீதி என்க. நீந்துபு - நீந்தி; கடந்து. வித்தக வினைஞர் - கலைவாணர். உறழ்பட - ஒப்புமையுண்டாக. 'சித்திரச் செய்கை படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம்' என்றார் மணிமேகலையினும் (3. 168 - 9.) எறுழ் - வலிமை. மொய்ம்பன் - தோளையுடையோன்.