பக்கம் எண் :

பக்கம் எண்:658

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
          நோயற வெறியு மருந்தோ ரன்ன
          வாய்மொழிச் சூழ்ச்சித் தோழற் குணர்த்தலிற்
          குழன்ற குஞ்சி நிழன்றெருத் தலைத்தரக்
    155    கழுவாது பிணங்கிய வழுவாச் சடையினன்
          மறப்போ ரானையின் மதந்தவ நெருக்கி
          அறப்பே ராண்மையி னடக்கிய யாக்கையன்
          கல்லுண் கலிங்கங் கட்டிய வரையினன்
          அல்லூ ணீத்தலி னஃகிய வுடம்பினன்
    160    வெற்ற வேந்தன் கொற்றங் கொள்கெனச்
          செற்றந் தீர்ந்த செய்தவச் சிந்தையன்
 
                   (யூகியின் நிலைமை)
            152 - 161 : நோயற..................சிந்தையன்
 
(பொழிப்புரை) வயந்தகன் மன்னவன் வருகையை, உற்ற நோயினைத் துவரத் தீர்க்குமொரு மருந்தையே ஒத்த வாய்மொழியையும் சூழ்ச்சியையும் உடைய யூகிக்கு அறிவியாநிற்றலாலே அவ்வமைச்சன், நுனிகுழன்ற தன் தலைமயிர் நீழலிட்டுத் தன் பிடரிலே கிடந்து புரளா நிற்பவும், கழுவிக் கைசெய்யாமையாலே பின்னிக்கிடக்கின்ற குற்றமற்ற சடையையுடையனாகவும், தீவினையென்னும் போரினையுடைய யானையினது செருக்கறும்படி ஒடுக்கித் தனது அறவொழுக்கமாகிய பேராற்றலாலே அடக்கி வைத்த கொட்டிலாகிய உடம்பினையுடையனாகவும் காவிக்கற்குழம்பிற் றோய்த்த ஆடையை உடுத்த அரையினையுடையனாகவும் இரவுணவொழித்தலாலே இளைத்த உடலினையுடையனாகவும் வெற்றியுடைய வேந்தன் கொற்றம் கொள்வானாக என்று வாழ்த்தும் நெஞ்சினையுடையனாகவும் வெகுளிதீர்ந்த செய்தவச் சிந்தையையுடையனாகவும் இராநிற்ப வென்க.
 
(விளக்கம்) தன்னரசனுக்குற்ற துன்பத்தைத் தீர்த்தற் குவமையாக யூகிக்கு நோயற வெறியும் மருந்தினை எடுத்தார். தோழன் : யூகி. வயந்தகன் தோழற் குணர்த்தலின் என்க. குழன்ற - கடைசுருண்ட. குஞ்சி - ஆண்மயிர். நிழன்று - நீழலிட்டு மறமாகிய யானையை என்க. அடக்கிக் கட்டிய கொட்டிலாகிய யாக்கையன் என்க. கல்லுண் கலிங்கம் - காவிக்கற்குழம்பிற் றோய்த்த ஆடை.

அல்லூண் நீத்தல் - சைனர் விரதங்களுள் ஒன்று. அஃகிய - இளைத்த. வெற்றம் - வெற்றி. செற்றம் - சினம். சிந்தையனாக இராநிற்ப என ஒருசொல் வருவித்தோதுக.