உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
7. வாசவதத்தை வந்தது |
|
நன்னுத
லரிவையும் பொன்னெனப் போர்த்த
பசலை யாக்கையொடு பையு
ளெய்தி
உருப்பவிர் மண்டிலத் தொருவயி னோடும்
165 மருப்புப் பிறையின் மிகச்சுடர்ந்
திலங்காது
புல்லெனக் கிடந்த நுதலினொ
டலமந்
தியல்பிற் றிரியா வின்பெருங்
கிழவனை
வியலக வரைப்பின் மேவர
வேண்டி விரத
விழுக்கலம் விதியுளி யணிந்து
|
|
(வாசவதத்தையினியல்பு)
162 - 169 : நன்னுதல்............அணிந்து
|
|
(பொழிப்புரை) இனி நல்ல நுதலையுடைய வாசவதத்தை தானும் பொன்னிறங்கொண்டு மூடிய பசலையையுடைய
யாக்கையோடு பிரிவுத் துன்பத்தைப் பெரிதும் உடையளாய் வெப்பத்தைப் பரப்புகின்ற
ஞாயிற்று மண்டிலத்தை அணுகி ஒரு பக்கத்தே இயங்காநின்ற இரு கோடுகளையுடைய இளம்பிறை
போன்று மிகுதியாக ஒளிவிட்டு விளங்குதலின்றிப் பொலிவிழந்து கிடந்த நுதலோடும் மனஞ்
சுழன்று நல்லியல்பிலே மாறுபடாத இனிய பெருமைமிக்க தன் கேள்வனை மீண்டும்
இப்பேருலகத்தே தான் பொருந்துதலை விரும்பி மேற்கொண்ட விரதத்தின் சிறந்த அணிகள்
மட்டும் முறைப்படியே அணிந்தவளாகவும் என்க.
|
|
(விளக்கம்) அரிவை : வாசவதத்தை. பையுள் - துன்பம். உருப்பு -
வெப்பம். மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம். மருப்பு - இரு நுனி. ஞாயிற்று மண்டிலத்தை அணுகி
இயங்குதலாலே இளம்பிறை ஒளிமழுங்கித் தோன்றுதலியல்பு. அலமந்து - சுழன்று. இயல்பு -
நற்பண்பு. கிழவன் : உதயணன். மேவர - பொருந்துதல் உண்டாக. விரதவிழுக்கலம் -
நோன்பின் பொருட்டு அணிகின்ற சிறந்த அணிகலன். அஃதாவது கடிகைநூல். இதனை
'பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல்
யாத்து' எனவரும் நெடுநல் வாடையினும் (141-2) காண்க. விதியுள் -
முறைப்படி.
|