பக்கம் எண் :

பக்கம் எண்:660

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         
     170    திரித லில்லாச் செந்நெறிக் கொள்கையள்
           பொன்னிறை சுருங்கா மண்டிலம் போல
           நன்னிறை சுருங்கா ணாடொறும் புறந்தரூஉத்
           தன்னெறி திரியாத் தவமுது தாயொடும்
           விருத்துக் கோயிலுட் கரப்பறை யிருப்ப
 
                    (இதுவுமது)
             170 - 174 : திரிதல்.........இருப்ப
 
(பொழிப்புரை) பிறழ்தலில்லாத செவ்விய கற்பு நெறியை மேற்கொண்ட கோட்பாடுடையளாகவும் ஒளி குன்றினும் தன் பெருமையிற் குறையாத ஞாயிற்று மண்டிலம் போன்று துன்பத்தாலே தனது ஒளி மழுங்கினும் தன் நெஞ்சின்கண்ணே நல்ல நிறைப்பண்பு குறையா தவளாகவும், நாள்தோறும் தன்னோடிருந்து தன்னைப் பாதுகாத்து வருகின்றவளும், தனது நெறியிலே பிறழ்தலில்லாதவளும் ஆகிய தவச் செல்வியாகிய சாங்கியத் தாயோடு விருந்தினர்க்கென்றமைக்கப்பட்ட மாளிகையின் கண்ணே ஒரு கரப்பறையின்கண் இராநிற்ப வென்க.
 
(விளக்கம்) தவமுதுதாய் : சாங்கியத்தாய். விருத்துக் கோயில் - விருந்தின் மன்னன் இருந்து இன்பம் நுகர்தற்கென அமைத்த மாளிகை. ''புதுவதின் வந்த விருந்தின் மன்னர் இருந்து பயன் கொள்ள இயற்றப்பட்ட செயற்கருங் கா'' என்று முன்னரும் (4 - 4 : 105 - 6) வந்தமை காண்க.

கரப்பறை - ஒளித்தற்குரிய அறை.