பக்கம் எண் :

பக்கம் எண்:661

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         
     175    யாப்புடைத் தோழ னரசனோ டணுகிக்
           காப்புடை முனிவனைக் காட்டின னாக
           மாசின் மகதத்துக் கண்டோ னல்லன்
           யூகி மற்றிவ னொளியல தெல்லாம்
           ஆகா னாகலு மரிதே மற்றிவன்
     180    மார்புற முயங்கலும் வேண்டுமென் மனனென
           ஆராய் கின்றோற் ககலத்துக் கிடந்த
           பூந்தண் மாலையொடு பொங்குநூல் புரள
           இதுகுறி காணென விசைப்பது போல
           நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற
 
          (உதயணன் யூகியை அறிந்துகொண்டு தழுவுதல்)
                175 - 184 : யாப்புடை.........தோன்ற
 
(பொழிப்புரை) ன்புத் தொடர்புடைய வயந்தகன் பின்னர் அரசனோடு சென்று பொறிகள் புலனிற் செல்லாது காத்தலையுடைய முனிவனாகிய யூகியைக் காகதுண்டக முனிவர் உதோ வீற்றிருக்கின்றார் என்று காட்டினனாக; அவனைக் கண்ட உதயணகுமரன் 'இவன் குற்றமற்ற மகதநாட்டிலே நம்மாற் காணப்பட்ட காகதுண்டகமுனிவனல்லன். இவன் யூகியே; இவன் யாக்கை ஒளி ஒன்றாலன்றி ஏனைய அடையாளங்கள் அனைத்தினும் அம்முனிவனை ஒத்திலன்; அங்ஙனம் ஒத்திருத்தலும் மிகவும் அரிதேயன்றோ? மேலும் இவனைக் கண்டபொழுதே இவனை என் மார்போடு பொருந்தத் தழுவவேண்டும் என்று என் மனம் பெரிதும் விரும்பாநின்றது'' என்று தனக்குட் கருதிப் பின்னரும் அவனைக் கூர்ந்து நோக்கி ஆராய்பவனுக்கு அவ்வியூகியின் மார்பிலே கிடந்த குளிர்ந்த மலர் மாலையும் புரிமிக்க பூணூலும் புரளாநிற்றலாலே அவ்வமைச்சன் மார்பிலே கிடந்த பண்டொரு காலத்தே யானை மருப்பழுந்தியமையாலுண்டான தழும்பு உதயணனை நோக்கி ''இதோ யூகிக்கான அடையாள முளது; கண்டுகொள்வாயாக'' வென்று அறிவிப்பது போன்று நுண்ணிதாகத் தோன்றாநிற்ப என்க.
 
(விளக்கம்) தோழன் : வயந்தகன். காப்பு - பொறியடக்கம். கண்டோன் - காணப்பட்டவன். ஒளிமட்டும் இருவருக்கும் ஒத்துளது என்றவாறு. உழுவலன்புண்மையாலே மனம் தழுவ விரும்பிற்று என்பது கருத்து. ஆராய்கின்றோன் : பெயர். அகலம் - மார்பு. நூல் - பூணூல். மருப்பு நுதி சிலேகை - கொம்பின் நுனியழுத்திய கோடாகிய தழும்பு. யூகிக்கு மார்பின்கண் இங்ஙனமொரு தழும்புண்டென்பதனை

 'வலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன்
  குஞ்சர மருப்பிற் குறியிடப் பட்டுச்
  செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து
  மார்பினது வனப்பும்'   (1. 45 : 20 - 3)

என முன்னும் வந்தமையாலுணர்க.