பக்கம் எண் :

பக்கம் எண்:662

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
         
     185    ஐயந் தீர்ந்து வெய்துயிர்த் தெழுந்துநின்
           றூறில் சூழ்ச்சி யூகந்த ராய
           நாறிருங் கூந்தலை மாறிப் பிறந்துழிக்
           காணத் தருகுறு முனிவனை நீயினி
           யாணர்ச் செய்கை யுடைத்தது தெளிந்தேன்
     190    வந்தனை யென்றுதன் சந்தன மார்பிற்
           பூந்தார் குழையப் புல்லினன் பொருக்கெனத்
 
                      (இதுவுமது)
             185 - 191 : ஐயம்...........புல்லினன்
 
(பொழிப்புரை) அது கண்ட அரசன் ஐயந் தீரப்பெற்றவனாய் வெய்தாக மூச்செறிந்து எழுந்து நின்று இடையூறு சிறிதுமில்லாத நல்ல சூழ்ச்சியினையுடைய யூகந்தராயனே! -- நறுமணங்கமழும் கூந்தலையுடைய வாசவதத்தை மாறிப் பிறந்தவிடத்தினின்றும் மீட்டுக் கொணர்ந்து யான் காணும்படி தாராநின்ற முனிவர் பெருமானே,--இப்பொழுது நீயே ஈண்டு வந்தனைகாண் ! அங்ஙனம் வந்தமையாலே ஒரு புதிய செயலும் நிகழவிருக்கின்றது என்றும் யான் தெளிந்து கொண்டேன் காண் ! என்று கூறி அந்த யூகியை இரு கைகளாலும் அணைத்துச் சந்தனந் திமிர்ந்த தன் மார்பிலணிந்த மலர்மாலை குழையும்படி தழுவிக் கொள்வானாயினன் என்க.
 
(விளக்கம்) ஐயம் - இவன் யூகியோ? அல்லனோ ? என்னும் ஐயம். ஊறு - இடையூறு. பிறர் உற்றறிதலுமாம். யூகந்தராயன் - யூகியின் முழுப்பெயர். நாறிருங் கூந்தல்; வாசவதத்தை. தருகுறும் - தரும். இனி - இப்பொழுது. நீ வந்தமையால் புதிய நிகழ்ச்சி ஒன்று நிகழவிருக்கின்றது என்றது, யான், வாசவதத்தையை மீண்டும் எய்துவேன் என்னும் குறிப்புடையது. யாணர்ச் செய்கை - புதுச் செயல், புல்லினன் - தழுவினன்.