பக்கம் எண் :

பக்கம் எண்:667

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           பிரிவிடைக் கொண்ட பின்னணி கூந்தல்
           செருவடு குருசி றாண்முதற் றிவள
           உவகைக் கண்ணீர் புறவடி நனைப்பக்
           கருவி வானிற் கார்த்துளிக் கேற்ற
     215    அருவி வள்ளியி னணிபெறு மருங்குலள்
           இறைஞ்சுபு கிடந்த சிறந்தோட் டழீஇச்
           செல்ல றீரப் பல்லூழ் முயங்கி
 
                       (இதுவுமது)
            211 - 217 : பிரிவிடை.... ... ... ...முயங்கி
 
(பொழிப்புரை) தன் பிரிவுக்காலத்தே மேற்கொண்ட பின்னுதல் கொண்டு சடையாகத் திரண்ட தனது அழகிய கூந்தல் பகைவரைக் கொல்லும் ஆற்றல் மிக்க தன் தலைவனுடைய திருவடிகளிலே கிடந்து துவளா நிற்பவும், கணவனைக் கண்டமையாலுண்டான மகிழ்ச்சியாலே பெருகிய இன்பக் கண்ணீர் அக்கணவனுடைய புறவடிகளை நனையா நிற்பவும், மின் முதலிய தொகுதியையுடைய முகில் கார்ப்பருவத்தே பெய்யும் மழையினை எதிர்ந்த அருவி வீழப்பெற்ற பூங்கொடிபோன்று தன் கண்ணீர் வீழ்ந்து பொலிவுற்ற இடையினையுடையளாய் வீழ்ந்து வணங்கிக் கிடந்த அந் நங்கையை உதயணன் தன் கைகளால் எடுத்துத் தழுவித் தன் துன்பமெல்லாம் அகன்றொழியும்படி மீண்டும் மீண்டும் தழுவிய பின்னர் என்க.
 
(விளக்கம்) பிரிவுக் காலத்தே கைசெய்யாது விடப்பட்டமையால் உண்டாகிய சடையாகிய கூந்தல் என்க. குருசில் : உதயணன். திரள - துவள. கருவி - மின் முதலிய தொகுதி. வான் - முகில். கார் - கார்ப்பருவம். ஏற்ற - எதிர்ந்த. அருவி வீழப்பெற்ற வள்ளி என்க. வள்ளி - கொடி. சிறந்தோள் : வாசவதத்தை. செல்லல் - துன்பம்; பல்லூழ் - பலகாலும்.