பக்கம் எண் :

பக்கம் எண்:669

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           இரவிடைக் கண்ட வண்ணமொ டிலங்கிழை
           உருவ மொத்தமை யுணர்ந்தன னாகி
           ஆய்பெருங் கடிநக ரறியக் கோயிலுள்
    230    தேவியை யெய்திச் சிறப்புரை பரப்ப
           இருங்கண் முரசம் பெருந்தெரு வறைதலின்
 
                   (யாவரும் நகர் செல்லல்)
             227 - 231 : இரவிடை.............அறைதலின்
 
(பொழிப்புரை) தான் இரவின்கண் கண்ட வடிவத்தோடு ஈண்டுக் கண்ட வாசவதத்தையின் உருவம் ஒத்தமையாலே இக் காட்சி மாயக்காட்சியன்று மெய்க்காட்சியே என்றுணர்ந்தவனாய் ஏவலர் சென்று அழகிய காவலையுடைய அரண்மனையிடத்தே வாழ்வோர் அறியவும் பதுமாபதிபாற் சென்று அவள் அறியவும் சிறப்புடைய வாசவதத்தை வரவினை அறிவுறுத்திப் பரப்பாநிற்பவும், வள்ளுவர் இச் சிறப்புரையைக் கூறிப் பெரிய கண்ணையுடைய முரசத்தைப் பெரிய தெருக்களிலே முழக்குதலாலே, என்க.
 
(விளக்கம்) இலங்கிழை; வாசவதத்தை. ஆய் - அழகிய. கடிநகர் - காவலையுடைய அரண்மனை; ஆகுபெயர்; ஆங்குவாழும் மாந்தர். கோயில் - பதுமாபதி மாளிகை, தேவி : பதுமாபதி. இருங்கண் - கரிய கண்ணுமாம். பெருந்தெரு : அரசவீதி.