பக்கம் எண் :

பக்கம் எண்:67

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
     60    நெய்ந்நிறங் கொண்ட பைந்நிற மஞ்சளின்
           வைம்மருப் பணிபெற வண்ணங் கொளீஇக்
           கைவினைக் கண்ணி கவின்பெறச் சூட்டித்
           தகைமலர்ப் பொற்றார் வகைபெற வணிந்து
           காண்டகு வனப்பிற் காலியற் செலவிற்
     65    பாண்டில் வையம் பண்ணிப் பாகன்
           கோலுடைக் கையிற் கூப்புவன னிறைஞ்சி
           வையம் வந்து வாயி னின்றமை
           தெய்வ மாதர்க் கிசைமின் சென்றென
 
        (வண்டி யெருதுகளின் மாண்பு)
        60 - 68 ; நெய்,,,,,,,,,சென்றென
 
(பொழிப்புரை) நெய்யின் நிறம்போன்ற நிறமமைந்த
  பசுமஞ்சளாலே கூரிய கொம்புகள் அழகெய்தும்படி வண்ணந்தீற்றிக்
  கைத்தொழிலாற் சிறந்த நெற்றிமாலையை அழகாகச் சூட்டி அழகிய
  பொன்மலர் மாலையைத் தகுதியாக அணிந்து விரும்பிக் காண்டற்குத்
  தகுந்த அழகினையும் காற்றென விரைந்து செல்லும் செலவினையும்
  உடைய நரையெருதுகள் பூட்டப்பட்ட அவ்வண்டியைப் பண்ணுறுத்தித்
  தாற்றுக் கோலையுடைய கையையுடைய வண்டிப்பாகன் வந்து காவன்
  மகளிரைக் கைகூப்பி வணங்கி நின்று நீயிர் சென்று வண்டி வந்து
  வாயிலிலே நிற்பதனை நம்தெய்வம்போன்ற கோமகளுக்குக் கூறுங்கோள்
  என்று கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) வைமருப்பு - கூரிய கொம்பு. கண்ணி-நெற்றிமாலை
  கவின் - அழகு. காலியல் - காற்றைப்போன்று விரைந்துசெல்லுந்தன்மை.
  கோல்-தாற்றுக்கோல், தெய்வமாதர் - பதுமாபதி.