பக்கம் எண் :

பக்கம் எண்:671

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           பஞ்ச வண்ணத்துப் படாகை நுடங்கக்
           குஞ்சர வெருத்திற் குடைநிழற் றந்த
     240    புண்ணிய நறுநீர் துன்னினர் குழீஇ
           அரசனுந் தேவியுந் தோழனு மாடி
           விலைவரம் பறியா விழுத்தகு பேரணி
           தலைவரம் பானவை தகைபெற வணிந்து
           கூறுதற் காகாக் குறைவி லின்பமொடு
     245    வீறுபெற் றனரான் மீட்டுத்தலைப் புணர்ந்தென்.
 
                     (இதுவுமது)
            238 - 245 : பஞ்ச.............புணர்ந்தென்
 
(பொழிப்புரை) அந்நகரப் பெருங்குடி மாந்தர் வந்து குழுமி ஐவண்ணம் உடைய அரசியற் பெருங்கொடி ஆடாநிற்ப யானையின் பிடரிலேற்றிக் குடைநீழலிற் கொணர்ந்த புண்ணிய நறு நீரின்கண் உதயண மன்னனும் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையும் யூகியும் மங்கலமுழுக்குக் கொண்டவராய் விலைக்கு எல்லை காணமாட்டாத பேரணிகலன்களாகிய முதன்மையுடையவற்றை அழகுற அணிந்துகொண்டு மீண்டும் ஒருங்கே கூடிக் கூறுதற்கியலாத குறைவற்ற பேரின்பத்தோடே வீறு பெற்றுத் திகழா நின்றனர் என்க.
 
(விளக்கம்) பஞ்சவண்ணம் - ஐந்துவகை நிறம். படாகை - கொடி. நகரமாந்தர் துன்னினர் குழீஇத் தந்த நீர் என்க. அணிகலன்கட்குத் தலைவரம்பானவை என்க. தகை, அவ்வணிகலன் அழகுபெற அணிந்து எனினுமாம். வீறு - வேறொருவர்க்கும் இல்லாத அழகு.

7. வாசவதத்தை வந்தது முற்றிற்று.