பக்கம் எண் :

பக்கம் எண்:672

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
            மீட்டுத்தலைப் புணர்ந்த காலை மேவார்
            கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடுந்தேர்
            உருவ வெண்குடை யுதயண குமரன்
            ஒருநலத் தோழன் யூகந்த ராயற்
  5         கருளறம் படாஅ னகத்தே யடக்கி
            முகனமர் கிளவி முன்னின் றுரைப்பின்
            ஏதின்மை யீனு மேனோர் மாட்டெனக்
 
                  (உதயணன் செயல்)
                 1 - 7 : மீட்டு ........என
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணனும் வாசவதத்தையும் யூகியும் மீண்டும் கூடி மகிழ்ந்திருந்த காலத்தே பகைவர் படையினைச் சிறை கொண்ட கொடுஞ்சியினையுடைய நெடிய தேரினையும், அழகிய ஒளியுடைய கொற்ற வெண்குடையினையும், உடைய உதயண குமரன் தன் ஒப்பற்ற நலமிக்க தோழனாகிய யூகியந்தணனுக்குப் பரிசில் வழங்கும் அரசியலறத்தை மேற்கொள்ளானாய் அவன்றனக் காற்றிய நன்றியையும் வெளிப்படுத்துரையானாய் மனத்தின்கண் அடக்கி அவன் முன்னின்று முகமன் கூறிப் பாராட்டினும் மற்றையோர்க்கு அச் செயல் ஏதின்மையைக் காட்டுவதாகவே முடியும் என்று கருதி அவன் திறத்தே யாதும் கூறுதலிலனாய் என்க.
 
(விளக்கம்)  மேவார் - பகைவர். கூட்டம் - படை. வௌவிய - சிறை கொண்ட. கொடுஞ்சி - ஒரு தேர் உறுப்பு. உருவம் - அழகு. அருள் அறம் - பரிசில் வழங்கும் அரசியலறம். படான் - மேற் கொள்ளானாய். முகனமர் கிளவி - முகமன் மொழி. ஏதின்மை - அயலாந்தன்மை; நட்பின்மை. "முகனமர்கிளவி முன்னின்றுரைப்பின் ஏதின்மையீனும்" என்னுமிதனோடு "இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று புனையினும் புல்லென்னும் நட்பு" எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக. ஏனோர் - மற்றையோர்.