பக்கம் எண் :

பக்கம் எண்:673

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
         காதற் றேவிக்குக் கண்ணா யொழுகும்
         தவமுது மகட்குத் தாழ்ந்தருள் கூறிப்
  10     பயனுணர் கேள்விப் பதுமா பதியைத்
         தாங்கருங் காதற் றவ்வையை வந்து
         காண்க வென்றலுங் கணங்குழை மாதரும்
 
                     (இதுவுமது)
             8 - 12 : காதல்........... என்றலும்
 
(பொழிப்புரை) தன் காதலியாகிய வாசவதத்தைக்குக் கண் போன்றிருந்து அவளைப் பாதுகாவாநின்ற தவமுதுமகளாகிய சாங்கியத் தாய்க்குத் தன்னன்றியுணர்வினை நெஞ்சால் வணங்கி அருள் மொழி பல கூறிப் பாராட்டுமாற்றால் உணர்த்திப் பின்னர்ப் பயன் உணர்தற்குக் காரணமான நூற் கேள்வியையுடைய பதுமாபதியை நோக்கி "நீ நின்பால் தாங்கொணாத அன்பினையுடைய நின் தமக்கையாகிய வாசவதத்தையை அவள் மனைக்கு வந்து காண்பாயாக !" என்று கூறாநிற்றலாலே என்க.
 
(விளக்கம்)  தேவி : வாசவதத்தை. கண் போன்று பாதுகாத்தொழுகும் தவமுது மகள் என்க. தவமுது மகள் : சாங்கியத்தாய். நெஞ்சாற்றாழ்ந்து. பயன் - நூற்பயன். அவை, அறம் பொருள் இன்பம் வீடு என்பன. தவ்வை - தமக்கை; என்றது வாசவதத்தையை. காண்டற்கு ஏதுக் கூறுவான் தாங்கருங் காதற்றவ்வை என்றான்.