உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
20 தாதலர் கோதைத்
தையலுக்
கிசைத்தவள்
அணங்கருஞ் சீறடி வணங்கலின்
வாங்கிப்
பொற்பூண் வனமுலை பொருந்தப்
புல்லிக் கற்புமேம்
படீஇயர் கணங்குழை நீயென
ஆசிடைக் கிளவி பாசிழை
பயிற்றி 25 இன்பஞ் சிறந்த
பின்றை யிருவரும்
|
|
(இதுவுமது)
20 - 25 : தாதலர்.........பின்றை
|
|
(பொழிப்புரை) பூந்துகள் விரியும் மலர்மாலை யணிந்த அப்பதுமாபதி தன் வரவினை வாசவதத்தைக்கு
அறிவித்து உட்சென்று அப்பெருமகளின் அழகிய பெறற்கரிய சிற்றடிகளிலே வீழ்ந்து
வணங்காநிற்ப, அது கண்ட அக் கோமகள் அப்பதுமாபதியைத் தன்னிருகைகளானும் எடுத்துத் தன்
பொன்னணிகலன் அணிந்த அழகிய முலைகளோடு பொருந்தத் தழுவிக் கொண்டு
"கணங்குழையினையுடைய நங்கையே ! நீ கற்புடைமையாலே மேம்பாடுறக் கடவை !" என்று
வாழ்த்துமொழி பன்முறையும் கூறி இருவரும் அளவளாவி இன்பத்தாலே சிறப்புற்ற பின்னர்
என்க.
|
|
(விளக்கம்) தாது
- மகரந்தம்; தேனுமாம். கோதை : பதுமாபதி. தையல் : வாசவதத்தை. அணங்கு சீறடி
அருஞ்சீறடி எனத் தனித்தனி கூட்டுக. வாங்கி - எடுத்து, புல்லி - தழுவி. படீஇயர் - படுக.
ஆசிடைக் கிளவி - வாழ்த்து மொழி.
|