பக்கம் எண் :

பக்கம் எண்:678

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
           செங்கா னாரையொடு குருகுவந் திறைகொளப்
  40       பைங்காற் கமுகின் குலையுதிர் படுபழம்
           கழனிக் காய்நெற் கவர்கிளி கடியும்
           பழன வைப்பிற் பாஞ்சால ராயன்
          ஆற்றலின் மிக்க வாருணி மற்றும்
           ஏற்றலர் பைந்தா ரேயர்க் கென்றும்
  45       நிலத்தொடு தொடர்ந்த குலப்பகை யன்றியும்
           தலைப்பெரு நகரமுந் தனக்குரித் தாக்கி
           இருந்தனன் மேலு மிகழ்ச்சியொன் றிலனாய்ப்
 
                     (யூகி கூற்று)
           39 - 47 : செங்கால்.........இருந்தனன்
 
(பொழிப்புரை) "வேந்தே அச்செயல்களுக்குரிய காரணங்களைத் தெளிவுறக் கூறுவேன் கேட்டருள்க! செங்கால் நாரைகளும் குருகும் வந்து தங்குதலாலே பசிய அடிப்பகுதியையுடைய கமுகினது குலையினின்றும் உதிராநின்ற பழங்கள் கழனிகளின்கண் காய்த்துள்ள நெற்கதிரைக் கவர்ந்துகொண்டு போகும் கிளிகளை ஓட்டாநின்ற, வளமிக்க மருதநிலஞ் சூழ்ந்த பாஞ்சால நாட்டு மன்னனும் போராற்றலில் மிக்கோனும் ஆகிய ஆருணி வேந்தன் பருவமேற்று மலர்கின்ற பசிய மலர்மாலையணிந்த ஏயர் குலத்தரசர்க்கு என்றென்றும் நிலத்தோடு தொடர்புபட்ட குலப்பகைமையுடையோன் ஆவன். அதுவேயுமன்றி நமது பெரிய தலைநகரமாகிய இக்கோசம்பியையும் அற்றம் பார்த்துக் கைப்பற்றிக்கொண்டு தனக்குரிய தாக்கி ஈண்டு அரசுவீற்றிருந்தனன்;" என்க.
 
(விளக்கம்) குருகு - கொக்கு. செங்கால் பைங்கால் என்புழி முரண் தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இறைகொள - தங்கா நிற்ப. உதிர்படுபழம் - உதிர்கின்ற பழம். காய்நெல்: வினைத்தொகை. பழனவைப்பு - மருதநிலம். ஏற்று - பருவத்தை எதிர்ந்து. நிலத்தொடு தொடர்ந்த - நிலத்தோடு தொடர்புடைய. இருந்தனன் - அரசு வீற்றிருந்தனன்.