உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
இருந்தனன் மேலு மிகழ்ச்சியொன்
றிலனாய்ப் பிரச்சோ தனனோ டொருப்பா
டெய்தும் ஓலை மாற்றமுஞ் சூழ்ச்சியுந்
துணிவும் 50 காலம் பார்க்குங் கருமமு
மெல்லாம் அகத்தொற் றாளரி னகப்பட
வறிந்தவன் மிகப்பெரு முரட்சியை முருக்கு
முபாயம் மற்றிக் காலத் தல்லது
மேற்சென்று வெற்றிக் காலத்து வீட்டுத
லரிதென
|
|
(இதுவுமது) 47 - 54 :
மேலும்....................அரிதென
|
|
(பொழிப்புரை) மேலும் தனது ஆள்வினையின்கண் சோர்வு சிறிதும் இலனாய், அவ்வாருணிமன்னன் நம்
பகைவனாகிய பிரச்சோதனமன்னனோடு கேண்மைகொள்ள விடுத்த தூதோலைச் செய்தியும்
சூழ்ச்சிகளும் முடிவும், முடிவுகொண்ட பின்னர் நம்மை அழித்தற்குத் தகுந்த காலம்
பார்க்கும் செயலும், இன்னோரன்ன பிறவும் யான் என்னுடைய அக ஒற்றர்களை ஏவி அவன்
அரண்மனையினுள்ளே சென்று ஒற்றிவரும்படி செய்து தெரிந்துகொண்டு அப்பகை மன்னனது மிகவும்
பெரிய பகைமையை அழித்தற்குரிய உபாயம் இக்காலத்திலே கைகூடுவதல்லது அவனுடைய
வெற்றிமிக்க பிற்காலத்தே யாம் அவன் மேல் படைகொண்டு சென்று அவனை அழித்தல்
அரிதாகும் என்று கருதி; என்க.
|
|
(விளக்கம்) இகழ்ச்சி - உவகை மகிழ்ச்சியால் எய்தும்
சோர்வு. ஒருப்பாடு - ஒற்றுமைப்படுதல். ஓலைமாற்றம் - தூதோலை விடுத்த செய்தி. காலம்
- பகை வெல்லுதற்கேற்ற காலம். அகத்தொற்றாளர் - பகைவர் அரண்மனையினூடும் சென்று
ஒற்றிவரும் ஒற்றர். அவன் - ஆருணிமன்னன.் முரட்சி - பகைமை; வலிமையுமாம். முருக்கும் -
அழிக்கும். மேற்சென்று வீட்டுதல் அரிது என இயைத்துக்கொள்க - வீட்டுதல் -
கொல்லுதல்.
|