பக்கம் எண் :

பக்கம் எண்:68

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
           இசைத்த மாற்றத் துரைப்பெதிர் விரும்பிப்
     70    போதுவிரி தாமரைத் தாதகத் துறையும்
           தீதுதீர் சிறப்பிற் றிருமக ளாயினும்
           உருவினு முணர்வினு மொப்புமை யாற்றாத்
           தெரியிழை யல்குற் றேமொழிக் குறுமகள்
 
          பதுமாபதி மாண்பு
     69 - 73 ; இசைத்த,., ,....குறுமகள்
 
(பொழிப்புரை) பாகன்  கூறிய  மொழியைத்  தன்பால் 
  கூறியவுடன் பெரிதும் விரும்பி இதழ் விரிந்த தெய்வத் தாமரை
  மலரின் தாதுகளின் மேல் வீற்றிராநின்றவளும், உயிர்களின்
  தீங்கினைத் தீர்க்குஞ் சிறப்பினையுடையவளும் ஆகிய திருமகள்
  தானும் அழகானும் உணர்வினானும் தனக்கு உவமையாகமாட்டாத
  சிறப்பினையுடைய ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடைய
  அல்குலினையும் இனிய மொழிகளையும் உடைய இளமகளாகிய
 பதுமாபதி என்க.
 
(விளக்கம்) உரைப்பு -கூறுதல்.  தாது- பூந்துகள்.  தீது- வறுமை.
  உரு - அழகு. உணர்வு - அறிவு. குறுமகள் - இளமகள்.