உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
8. தேவியைத் தெருட்டியது |
|
  55 அற்புப் பாச
மகற்றி
மற்றுநின்
ஒட்ப விறைவியை யொழித்தன்
மரீஇக் கருமக்
கட்டுரை காணக்
காட்டி உருமண்
ணுவாவோ டொழிந்தோர்
பிறரும்
மகதநன் னாடு கொண்டுபுக் கவ்வழி
60 இகலடு நோன்றா ளிறைமகற்
கிளைய
பதுமா பதியொடு வதுவை
கூட்டிப்
படைத்துணை யவனாப் பதிவயிற் பெயர்ந்தபின்
|
|
(இதுவுமது) 55
- 62:
அற்பு....................பெயர்ந்தபின்
|
|
(பொழிப்புரை) "அச்செயலைக் காலந்தாழ்த்தலின்றி மேற்கொள்ளத் துணிந்து நின்னுடைய அன்புப்
பிணிப்பினை அகற்றி நினது ஒள்ளிய அறிவுடைய கோப்பெருந்தேவியை நின்னிடத்தினின்றும்
ஒழித்தலை அரண்மனை தீக்கொளுவுமாற்றால் செய்து முடித்து, அத்துன்பத்தால் கலக்கமெய்திய
நினக்கு ஆள்வினைக்குரிய கட்டுரை பலவற்றை நீ உணரும்படி எடுத்துக் காட்டி உருமண்ணுவாவும்
ஏனையோரும் யான் ஏவியபடி நின்னை நல்ல மகத நாட்டிற்கு அழைத்துச் சென்று அந்நாட்டின்
தலைநகரத்தே புகுந்து அவ்விடத்தே பகைவரை வெல்லும் வலிய முயற்சியினையுடைய கோமகனாகிய
தருசகன் தங்கை பதுமாபதியோடு நின்னைத் திருமணம் புணர்த்தி அம்மன்னவன் கேண்மைகொண்டு
அவன் படையையே துணையாகக் கூட்டிக்கொண்டு நீ இவ்வத்தவ நாட்டிற்கு மீண்டபின்னர்;"
என்க.
|
|
(விளக்கம்) அற்பு - அன்பு. ஒட்பம் - அறிவுடைமை. இறைவி -
கோப்பெருந்தேவி;வாசவதத்தை. இச்செயலில் நின்னை ஈடுபடுத்துவதற்கு இறைவியை ஒழித்தேன்
என்பது கருத்து. கருமக் கட்டுரை - காரியங்களைப்பற்றிய பொருள் பொதிந்த மொழிகள்.
நோன்றாள் - வலிய முயற்சி. இறைமகன் : தருசகன். வதுவை - திருமணம். அவன் படைத்துணை
ஆக என்க. பதி - வத்தவநாடு.
|