பக்கம் எண் :

பக்கம் எண்:682

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
         இருநிலம் விண்ணோ டியைந்தனர் கொடுப்பினும்
         பெருநில மன்ன ரேயதை யல்லது
  75     பழமையிற் றிரியார் பயன்றெரி மாக்கள்
         கிழமையிற் செய்தனன் கெழுதகை தருமெனக்
         கோனெறி வேந்தே கூறுங் காலை
         நூனெறி யென்றியா னுன்னிடைத் துணிந்தது
         பொறுத்தனை யருளென நெறிப்படுத் துரைப்ப
 
                (இதுவுமது)
          73 - 79 : இருநிலம்.............உரைப்ப
 
(பொழிப்புரை) "செங்கோல் நெறிபிறழாத வேந்தே ! பயனை ஆராய்ந்து கூறும் பழைமையில் திரியாராகிய அமைச்சர்கள் பிறர் தமக்குப் பெரிய இந்நில உலகத்தோடு மேனிலையுலகத்தையும் பொருந்தக் கொடுத்தாலும் தம் பெருநில மன்னர் ஏவிய காரியத்தைச் செய்வதே யல்லது அவரை வஞ்சித்துத் தாமாக ஒன்றும் செய்யார். அங்ஙனமிருப்பவும் யான் எனது நட்புரிமை இச்செயலைச் செய்ய இடந்தரும் எனத் துணிந்து அவ்வுரிமை காரணமாகவே செய்தேன். ஆராயுமிடத்து யான் நின்பால் செய்யத் துணிந்த இச்செயல் அமைச்சர் நூல்நெறி என்று கருதி யான் துணிந்த இச்செயலைப் பொறுத்தருளல் வேண்டும்" என்று முறைப்படுத்திக் கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) இருநிலம் - பெரிய நிலஉலகம். விண் - மேனிலை யுலகம். ஏயதை - ஏவியதனை. பயன்தெரிமாக்கள் - அமைச்சர். கிழமை - உரிமை. கெழுதகை - உரிமை. கெழுதகை இடந்தரும் என அக்கிழமையிற் செய்தேன் என்றான் என்க. இதனோடு "விழை தகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற், கேளாது நட்டார் செயின்" எனவும், "பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க, நோதக்க நட்டார் செயின்" எனவும் வரும் (804, 805) திருக்குறள்களையும் ஒப்பு நோக்குக.