பக்கம் எண் :

பக்கம் எண்:684

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
           
    85        இருவரு மவ்வழித் தழீஇயின ரெழுந்துவந்
              தொருபெருங் கோயில் புகுந்த பின்னர்
              வாசவ தத்தையொடு பதுமா பதியை
              ஆசி லயினி மேவரத் தரீஇ
              ஒருகலத் தயில்கென வருடலை நிறீஇயபின்
 
             (வாசவதத்தை பதுமாபதி ஆகிய இருவர் செயல்)
                  85 - 89 : இருவரும்................பின்
 
(பொழிப்புரை) உதயணனும் யூகியும் ஆகிய இருவரும் அவ்விடத்தே ஒருவரையொருவர் தழுவிக் கொண்டவராய் அவ்விடத்தினின்றும் எழுந்து ஒப்பற்ற பெரிய அரண்மனைக்குட் புகுந்த பின்னர் உதயணன் உவளகத்தில் வாசவதத்தையோடு பதுமாபதி அளவளாவி இருத்தலைக் கண்டு மகிழ்ந்து குற்றமற்ற  உணவினை அவ்விடத்தே கொண்டுவரும்படி செய்து நீவிர் இருவீரும் ஒருவீர் போல ஒருகலத்தே உண்ணுக! என அவ்விருவரையும் தனதருளின்கண்ணே சமமாக வைத்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) இருவரும் - உதயணனும் யூகியும். ஆசில் - குற்றமற்ற. அயினி - உணவு. தரீஇ - கொணர்வித்து. ஒருகலத்து - ஓர் உண்கலத்தில். அயில்க - உண்ணுக.