பக்கம் எண் :

பக்கம் எண்:685

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
            
    90     வளங்கெழு செல்வத் திளம்பெருந் தேவி
           அரும்பெறற் காதலன் றிருந்தடி வணங்கியப்
           பெருந்தகு கற்பினெம் பெருமக டன்னொடு
           பிரிந்த திங்க ளெல்லாம் பிரியா
           தொருங்கவ ணுறைதல் வேண்டுவ லடிகள்
    95     அவ்வர மருளித் தருதலென் குறையெனத்
           திருமா தேவியொடுந் தீவிய மொழிந்துதன்
           முதற்பெருங் கோயிற்கு விடுப்பப் போயபின்
 
                      (இதுவுமது)
               90 - 97 : வளம்.........பின
 
(பொழிப்புரை) வளம் பொருந்திய செல்வத்தையுடைய இளந்தேவியாகிய பதுமாபதி பெறலரிய தன் காதலனுடைய அழகிய அடிகளிலே வீழ்ந்து வணங்கி "அடிகளே! யான் ஒரு வரம் வேண்டுவல்; அஃதாவது : அப்பெருந்தகைமையுடைய கற்பினையுடைய எம்பெருமாட்டி வாசவதத்தையாரோடு எம்பெருமான் பிரிந்திருந்த திங்கள் எத்துணையோ அத்துணைத் திங்கள் இனி அவரைப் பிரியாமல் அவரோடு ஒருங்கே உறைவதனை  வேண்டுகின்றேன். அந்த வரத்தை அடியேனுக்கு அருளுதலே என் வேண்டுகோளாம்" என்று அவ்வரத்தையும் பெற்றுப் பின்னர் வாசவதத்தையோடும் இனிய மொழிகள் பல பேசி அவள்பால் விடைபெற்றுத் தனது மாளிகைக்குப் போன பின்னர்; என்க.
 
(விளக்கம்) இளம் பெருந்தேவி, பதுமாபதி. காதலன் : உதயணன். எம்பெருமகள் - எம்பெருமாட்டியாகிய வாசவதத்தை. அவண் - அப்பெருமாட்டியார் மாளிகையில். அடிகள் : விளி. அருளித்தருதல் - அருள்புரிக. என் குறை - என் வேண்டுகோள். திருமாதேவி : வாசவதத்தை. தீவிய - இனிய. விடுப்ப - விடை கொடுப்ப.