பக்கம் எண் :

பக்கம் எண்:687

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
            ஒக்கு மென்றசொ லுள்ளே நின்று
  105        மிக்குநன் குடற்ற மேவல ளாகிக்
            கடைக்கண் சிவப்ப வெடுத்தெதிர் நோக்கி
            என்னே ரென்ற மின்னேர் சாயலைப்
            பருகுவனன் போலப் பல்லூழ் முயங்கி
 
                (வாசவதத்தை சினத்தல்)
             104 - 108 : ஒக்கும்.........முயங்கி
 
(பொழிப்புரை) உதயணன் அவள் நின்னை ஒத்துத் தோன்றுதலால் என்ற சொல் தன்னுள்ளே நிலைத்து நின்று மிகவும் பெரிது வருத்துதலாலே அவனொடு பொருந்தாளாய்த் தன் கடைக்கண் சிவக்கத் தலையை நிமிர்த்து உதயணனைச் சினந்து நோக்கி, ''என்னேர்!'' என்று வினவிய மின்போன்ற சாயலையுடைய அவ்வாசவதத்தைக்குப் பின்னரும் பணி மொழி பல கூறி அவளைப் பருகுவான் போல நோக்கிப் பலகாலும் தழுவி; என்க.
 
(விளக்கம்) உதயணன் "பதுமாபதி நின்னைப் போலத் தோன்றினாள்" என்ற சொல் வாசவதத்தையைப் பெரிதும் துன்புறுத்தியது என்பது கருத்து. எதிர் சினந்து நோக்கி என்க. என்னேர் என்பது வினா. ஓகோ அவள் எனக்கு நிகராவளோ? என்று சினந்தபடி. பல்லூழ் - பன் முறையும்.