பக்கம் எண் :

பக்கம் எண்:688

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
         உருவி னல்லது பெண்மையி னின்னொடு
  110     திருநுதன் மடவோய் தினையனைத் தாயினும்
         வெள்வேற் கண்ணி யொவ்வா ளென்றவள்
         உவக்கும் வாயி னயத்தகக் கூறித்
 
        (உதயணன் வாசவதத்தையைத் தெருட்டி மகிழ்தல்)
                109 - 112 : உருவின்...........கூறி
 
(பொழிப்புரை) மீண்டும் அவளை இனிதின் நோக்கி, "திரு நுதல் மடவோய் ! அப்பதுமாபதி வெளித் தோற்றத்தினாலல்லது பெண்மை நலத்தில் நின்னை ஒரு தினைத்துணையும் ஒவ்வாள் காண்" என்று அவ்வாசவதத்தை நெஞ்சம் மகிழும் வழியை ஆராய்ந்து அவள் பெரிதும் விரும்பும்படி கூறி ; என்க.
 
(விளக்கம்) உருவம் என்றது புறத் தோற்றத்தை. பெண்மை - பெண்மைத் தன்மை. தினை - ஓர் அளவு. வெள்வேற் கண்ணி - வெள்ளிய வேல்போன்ற கண்ணையுடைய பதுமாபதி. அவள் : வாசவதத்தை. வாயில் - வழி. நயத்தக - விரும்பும்படி.