பக்கம் எண் :

பக்கம் எண்:689

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
         தெருட்டியுந் தெளித்து மருட்டியு மகிழ்ந்தும்
         இடையற வில்லா வின்பப் புணர்ச்சியர்
  115     தொடைமலர்க் காவிற் படையமை கோயிலுள்
         ஆனாச் சிறப்பி னமைதி யெல்லாம்
         ஏனோர்க் கின்றென வெய்திய வுவகையர்
         அறைகடல் வையத் தான்றோர் புகழ
         உறைகுவனர் மாதோ வுவகையின் மகிழ்ந்தென்.
 
                      (இதுவுமது)
        113 - 119 : தெருட்டியும்............மகிழ்ந்தென்
 
(பொழிப்புரை) இவ்வாறு ஊடலுணர்த்தியும், தெளிவித்தும், மருட்டியும், வாசவதத்தையும் உதயணனும் ஆகிய இருவரும் இடையீடில்லாத இன்பக் கூட்டத்தினையுடையராய்த் தொடுத்தற்கமைந்த மலரையுடைய பூம்பொழிலிலும், தளமிட்ட உவளக மருங்கினும், நுகர்கின்ற அமையாத சிறப்பினையுடைய இன்ப அமைதி யெல்லாம் இவ்வுலகின்கண் இவர்க்கேயன்றி மற்றையோர்க்கு  எய்திற்றில்லை என்னும்படி எய்திய மகிழ்ச்சியையுடையராய்ப் பேரின்ப உவகையிலே பெரிதும் மகிழ்ந்து முழங்குகின்ற கடல் சூழ்ந்த உலகின்கண் வாழ்கின்ற சான்றோர்கள் புகழும்படி இனிதே ஒருங்குடன் உறைவாராயினர்; என்க.
 
(விளக்கம்) தெருட்டல் - உணர்வித்தல். தெளித்தல் - தெளியும்படி செய்தல். மருட்டல் - வியப்பித்தல். தொடை - தொடுத்தல். படை - தளம்; சுவருமாம்; காவற்படையுமாம். அமைதி - இன்ப அமைதி. ஆன்றோர் - சான்றோர்.

                8. தேவியைத் தெருட்டியது முற்றிற்று.