பக்கம் எண் :

பக்கம் எண்:69

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
           பாவையும் பந்துங் கழங்கும் பசும்பொற்
     75    றூதையு முற்றிலும் பேதை மஞ்ஞையும்
           கிளியும் பூவையுந் தெளிமணி யடைப்பையும்
           கவரியுந் தவிசுங் கமழ்புகை யகிலும்
           சாத்துக் கோயும் பூத்தகைச் செப்பும்
           இன்னவை பிறவு மியைய வேந்தி
 
        மகளிர் ஏந்திய பொருள்கள்
         74 -79 ; பாவையும்.........ஏந்தி
 
(பொழிப்புரை) விளையாட்டுப் பாவையும் பந்தும். கழங்கும்
  பசிய பொன்னாலியன்ற பானையும் சிறுசுளகும் மடமயிலும் கிளியும்.
  நாகணவாய்ப் புள்ளும் தெளிந்த ஒளிமணிபதித்த அடைப் பையும்
  சாமரையும் இருக்கைகளும் நறுமணங்கமழும் புகையையுடைய
  அகிற்குறடும் சாந்திட்டுவைக்கும் உக்கோயும் மலரிட்டு வைக்கும்
  அழகிய செப்பும் இன்னோரன்ன பிறவுமாகிய பொருள்களை நிரல்பட
  ஏந்திவந்து என்க.
 
(விளக்கம்) தூதை - சிறுபானை. முற்றில் - சிறு  சுளகு, 
  பெண் தன்மையுடையதாகலின் பேதைமஞ்ஞை என்றார். மஞ்ஞை - மயில்
  பூவை - நாகணவாய்ப்புள். அடைப்பை-வெற்றிலைப்பை, உக்கோய்-பரணி
  என்னுமொரு சிமிழ்.