பக்கம் எண்:690
|
|
உரை | | 4. வத்தவ காண்டம் | | 9. விருத்தி வகுத்தது | | உவகையின்
மகிழ்ந்தாண் டுறையுங் காலை
உயர்பெருந் தொல்சீ ருருமண்
ணுவாவிற் கெழுநா
டோறு முழுநகர் புகழப்
படிவ முத்தீக் கடிகைக் கணனும்
5 ஐம்பெருங் குழுவு மத்தி
கோசமும் மன்பெருஞ்
சிறப்பின் மனைப்பெருஞ்
சனமும் தேனேர்
தீஞ்சொற் றேவி மார்களும்
தானையுஞ் சூழத் தானே
யணிந்துதன் நாம
மோதிர நன்னாட் கொண்டு 10
சேனா பதியிவ னாகெனச் செறித்துப்
| | (உதயணன் உருமண்ணுவாவுக்கு
விருத்தி
அளித்தல்)
1 - 10 : உவகை...........செறித்து
| | (பொழிப்புரை) இவ்வாறு உதயண நம்பியும் வாசவதத்தையும்
உடனுறை உவகையினாலே பெரிதும் மகிழ்ந்து அரண்மனையின்கண் உறையாநின்ற காலத்தே
உதயண மன்னன் உயர்ந்த பெரிய பழம்புகழையுடைய உருமண்ணுவா என்னும் அமைச்சனுக்குச்
சிறப்புச் செய்வான், அக்கோ நகரம் முழுவதும் புகழும்படி ஏழுநாள் விழாவெடுத்து விரத
ஒழுக்கினையுடைய மூன்று வகை வேள்வித் தீயினையுமுடைய முகூர்த்த விதானிகள் கூட்டமும்
ஐம்பெருங் குழுவினரும் அத்திகோசக் கூட்டத்தாரும் நிலைபெற்ற பெருஞ்சிறப்பினையுடைய
பெருங்குடி மாந்தரும் தேனை யொத்த இனிய சொல்லையுடைய வாசவதத்தையும் பதுமாபதியுமாகிய
தேவிமார்களும் படைத்தலைவர்களும் தன்னைச் சூழ்ந்து நிற்பத் தான் அணிந்துள்ள தன்
பெயர் பொறித்த மோதிரத்தை நல்லதொரு முழுத்தத்திலே 'இப்பெருமகன் நம்
படைத்தலைவன் ஆகுக!' என்று கூறித் தானே அவ்வுருமண்ணுவாவின் விரலிலே செறித்து
என்க.
| | (விளக்கம்) தொல் சீர் - வழிவழி வந்த பெரும் புகழ். நகர் முழுதும் புகழ என்க. நகர் : ஆகுபெயர்.
ஏழுநாள் விழா வெடுத்து என்க. படிவம் - விரத ஒழுக்கம். முத்தீ - மூன்று வகைப்பட்ட
வேள்வித்தீ. அவை : ஆகவனீயம், தக்கணாக்கினி, காருக பத்தியம் என்பன. கடிகைக் கணன்
- முகூர்த்த விதானிகளின் கூட்டம். இதனைச் சீவக சிந்தாமணியில் (2362) 'எண்ண
மென்னினி' எனவரும் செய்யுளில் கடிகையும் வருகென என்புழி, 'கடிகை - முகூர்த்த விதானி'
என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும் உணர்க. கணன் - கணம்; கூட்டம். ஐம்பெருங்குழு
- அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர். அத்தி கோசம் - யானை
எடுத்தற்குரிய செல்வமுடையவரென்ப. அத்தி கோசத்தாரை அத்தி கோசம் என்றது ஆகுபெயர்.
இவர் கூட்டமாக வாழ்பவர் என்பது தொல் - பெயர். சூ. 11. நன். சூ. 275,
இவற்றினுரைகளில் குழுவின் பெயர்க்கு அத்தி கோசத்தார் என்று மேற்கோள் காட்டப்
பட்டிருத்தலால் விளங்கும். தன் நாம மோதிரம் - தன் பெயரெழுதிய மோதிரம்.
'ஆம்பான் மணி நாம மோதிரந் தொட்டையென்ன' (சீவக 1040); 'போர்க்கெல்லாந்,
தானாதியாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர், ஏனாதிப் பட்டத்திவன்' தொல், புறத்.
சூ. 8, 7, 'செம்பொ னீண்முடித் தேர்மன்னர் மன்னற்குப், பைம்பொ னாழிதொட்
டான்படை காட்டினான்' சீவக (2167.) என வருவனவுங் காண்க. சேனாபதிப் பதவி அமைச்சர்
பதவியினும் சிறந்தது என்ப.
|
|
|