பக்கம் எண் :

பக்கம் எண்:696

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          இசைச்சன் முதலா வேனோர் பிறர்க்கும்
          பயத்தின் வழாஅப் பதிபல கொடுத்துப்
    40    பெயர்த்தனன் போக்கிப் பிரச்சோ தனனாட்
          டருஞ்சிறைக் கோட்டத் திருந்த காலைப்
          பாசறை யுழந்த படைத் தொழி லாளரை
          ஓசை முரசி னொல்லெனத் தரூஉ
 
          (இசைச்சன் முதலாயினோர் பெற்றவை)
              38 - 43 : இசைச்சன்............தரூஉ
 
(பொழிப்புரை) இசைச்சன் முதலிய மற்றைத் தோழர்களுக்கும் வருவாயில் குறைதலில்லாத ஊர்கள் பலவற்றை வடக்குப் புறமாக வழங்கித் தன் நகரத்தினின்றும் அவ்வவர் ஊர்க்குச் செலுத்திப் பின்னர்த் தான் பிரச்சோதன மன்னனுடைய நாட்டின்கண் தப்புதற்கரிய சிறைக்கோட்டத்திலிருந்த காலத்தே தன் பொருட்டு மாறுவேடமுடையராய்ப் பாசறையின்கண் போர்த்தொழில் செய்த படைத் தொழிலாளரை எல்லாம் ஓசையையுடைய முரசறைந்து ஆரவாரத்தோடு வரவழைத்து..............., என்க.
 
(விளக்கம்) ஏனோர் - மற்றைத்தோழர்கள். பயம் - பயன். பதி - ஊர். பிரச்சோதனன் நாடு - அவந்தி நாடு. பாசறை - படைவீடு. ஒல்லென : ஒலிக்குறிப்பு. தரூஉ - வரவழைத்து. 41 ஆம் எண்ணில் நிற்றல் வேண்டிய ஓரடி அழிந் தொழிந்தது.