பக்கம் எண் :

பக்கம் எண்:697

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          னெச்சத் தோர்கட் கியன்றவை யீத்து
    45    நிச்ச மாயிர முற்றவை நல்கிப்
          பக்கற் கொண்டு பாற்படுத் தோம்பி
          இலாவா ணகவழிச் சாதக னென்னும்
          குலாலற் கேற்பப் பெருங்குய மருளி
          இருந்தினி துறைகென விரண்டூ ரீத்து
 
                    (இதுவுமது)
            44 - 49 : எச்சத்தோர்............ஈத்து
 
(பொழிப்புரை) (அப்போரின்கண் இறந்தோர்) மக்கண் முதலியோர்க்கு வழங்கும் மரபினவாகிய பொருள்களையும் வழங்கி அவர்கட்கு நாள்தோறும் ஆயிரம் பொன் ஊதியமாகப் பொருந்தியவற்றை வழங்கி அப்படை மறவர்களைத் தன் பக்கத்திலே அமைந்த படைச் சேரியின்பால் இருத்திப் பாதுகாத்து மேலும் இலாவாணக நகரத்தினனாகிய சாதகன் என்னும் நண்பனாகிய குயவன் தகுதிக்கேற்ப ''பெருங்குயம்'' என்னும் சிறப்புப் பட்டப்பெயரையும் வழங்கி மேலும் நீ இனிதிருந்து வாழ்வாயாக என்று இரண்டூர்களையும் வழங்கி; என்க.
 
(விளக்கம்) எச்சத்தோர் - மக்கள் பெயரர் முதலியோர். இயன்றவை - போரிற்பட்டோர் மக்களுக்கு இத்துணை வழங்குதல் வேண்டும் என்று நூலின்கண் கூறப்பட்டவை. நிச்சம் - நாள் தோறும். உற்றவை - ஊதியமாகப் பொருந்தியவை. இலாவாணக வழிச்சாதகன் - இலாவாணகத்தின்கண் உள்ள சாதகன். சாதகன் : இவனுடைய ஊர் கோசம்பி நகரம். குயவன் : உதயணன் சிறைப்பட்ட பொழுது அது பொறாமல் வேறு வடிவங்கொண்டு தானும் உடன் சென்று உஞ்சை நகரின் பக்கத்திலுள்ளதோர் ஊரின் ஒரு வீட்டிலிருந்து உதயணனுக்கு உதவி செய்தவன், யூகிக்கு உயிர்த்தோழன், அரசன்பால் அன்புமிக்கவன், யூகிக்கும் உரு மண்ணுவாவுக்கும் இடையே பிறர் அறியாமல் தூதுத் தொழில் மேற்கொண்டவன். உதயணன் இலாவாணக நகரம் வந்த பின்னர் அங்குக் குடியேறினான். ஆதலின் ஈண்டு இலாவாணக வழிச்சாதகன் என்று கூறப்படுகின்றான்.