பக்கம் எண் :

பக்கம் எண்:699

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          தொன்றிற் கொண்டு தொடர்ச்சியிற் பழையோர்
          ஒன்றிற் குதவா ரென்றுபுறத் திடாது
    60    நன்றி தூக்கி நாடிய பின்றை
          யூகி தன்னோ டொழிய வேனைப்
          பாகியல் படைநர் பலரையும் விடுத்து
          மாசின் மாணகக் கோயில் குறுகிக்
          குடிப்பெருங் கிழத்திக்குத் தானஞ் செய்கென
    65    நடுக்கமில் சேம நன்னா டருளி
 
                  (இதுவுமது)
            58 - 65 : தொன்றில்............அருளி
 
(பொழிப்புரை) பழங்காலந் தொட்டுத் தங்குலத்தாரைத் தொடர்ந்து வருகின்ற பழைமையுடைய மறக்குடி மாந்தரை இவர் நமக்கு ஒரு காரியத்திற்கும் உதவுவாரல்லர் என்று புறத்தே தள்ளிவிடாமல் அவர் பண்டுசெய்த நன்றியைச் சீர்தூக்கி உணர்ந்து அவர்கட்கும் சீவிதமருளிய பின்னர் யூகியைத் தன்னோடு இருக்கும்படி செய்து பாகரும் படை மறவரும் ஆகிய ஏனையோர் பலரையும் இங்ஙனமே விருத்தி வழங்கி அவரவர் ஊர்க்குப் போக்கிய பின்னர்க் குற்றமற்ற அரண்மனைக்குட் சென்று ஆங்கு வாழுகின்ற தன் குடிப்பெருங் கிழத்தியாகிய நற்றாய் தானம் செய்தற்பொருட்டு வற்கடத்தால் நடுங்குதலில்லாத பாதுகாப்பமைந்த நல்ல நாட்டினை வழங்கி; என்க.
 
(விளக்கம்) தொன்றிற்கொண்டு - பழங்காலத்திலிருந்து. ஒன்றிற்கு - ஒரு காரியத்திற்கும். நாடி - அவரவர்க்கு ஏற்ற சீவிதம் வழங்கிய பின்னர் என்க. பாகியல் - பாகியலினர். யானை தேர் முதலியவற்றின் பாகர்கள் என்க. மாசில்கோயில் - மாண்கோயில், அகக்கோயில், எனத் தனித்தனி கூட்டுக. நடுக்கம் - வற்கடத்தால் உயிர்கள் நடுங்குதல். சேமம் - பாதுகாப்பு.