பக்கம் எண் :

பக்கம் எண்:7

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     45    அள்ளற் றாமரை யகவித ழன்ன
           அரிபரந் தகன்ற வம்மலர் நெடுங்கட்
           டெரிமலர்க் கோதைத் தேவியு மின்றித்
           தருமமு மருத்தமுங் காமமு மிழந்தே
           இருநில மருங்கி னிறைமை தாங்கி
     50    வாழ்தலி னினிதே யாழ்தலென் றழிந்தே
           உரக்கவின் றேய விரக்கமொ டரற்றவும்
 
               (இதுவுமது)
         45 - 51 ; அள்ளல்............அரற்றவும்
 
(பொழிப்புரை) 'சேற்றில்பிறந்த செந்தாமரை மலரின்
  அகவிதழ்  போன்ற  செவ்வரி பரந்து அகன்ற அழகிய
  மலர்ந்த  நெடிய  கண்களையும்  ஆராய்ந்து  தொடுத்த
  மலர்  மாலையினையும்  உடைய   என் ஆருயிர்க்
  காதலியாகிய  வாசவதத்தையும் ஆகிய இம் மூவரையும்
  இழந்து, அவரின்மையாலே யான் இவ்வுலகத்தே மக்கட்குரிய
  அறம்  பொருள்  இன்பம்  என்னும்  உறுதிப்  பொருள்
  மூன்றனையும் ஒருங்கே இழந்து அரசுரிமையை மட்டும் சுமந்து
  கொண்டு உயிர்  வாழ்ந்திருத்தலினுங்  காட்டில்  இறந்து படுதல்
  ஆற்றவும் இனிதாமன்றே!'' என்று நினைந்து நினைந்து நெஞ்சழிந்து
  தனது அறிவும் அழகும் தேய்ந்தொழியுமாறு இரக்கத்தோடு அழா
  நிற்ப என்க.
 
(விளக்கம்) சாங்கியத்தாயாகிய நட்பும், யூகியாகிய
  அமைச்சும் இன்மையால் பொருளும் வாசவதத்தை இல்லாமையால்
  அறமும் இன்பமும் இல்லையாயின என்க. அள்ளல் - சேறு. அரி -
  செவ்வரி, மலர்கண் நெடுங்கண் என்று தனித்தனி கூட்டுக. மலர்கண்;
  வினைத்தொகை. தெரிமலரும் அது, தேவி - வாசவதத்தை இறைமை
  - அரசுரிமை. ஆழ்தல்-இறத்தல். உரமும் கவினும் என்க. இரக்கம் -
  அழுகை என்னும். மெய்ப்பாடு. இஃது இழவு நிலைக்களனாகப் பிறந்தது
  - என்னை ?இளிவே - இழவே அசைவே வறுமையென, விளிவில்
  கொள்கை அழுகை நான்கே" என்பவாகலின் (தொல்-மெய்ப்-5.).
  அரற்றவும் என்புழி உம்மை இசைநிறை.