பக்கம் எண் :

பக்கம் எண்:700

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்
          தேவி விருத்தி யாவன வருளி
          ஆடலும் பாடலு மணியினு மிக்கோர்
          சேடி மாரையு மிருகூ றாக்கிக்
    70    கொள்கென வருளிக் குறைபா டின்றி
 
        (உதயணன் தன் தேவிமார்க்கு விருத்தியளித்தல்)
            66 - 70 : வாசவதத்தை............அருளி
 
(பொழிப்புரை) இன்னும், வாசவதத்தையும் பதுமாபதியும் ஆகிய கோப்பெருந்தேவிமார் இருவர்க்கும் தேவி விருத்தி என்னும் சிறப்புச் சீவிதப் பொருள்களை அவர் பெருமைக்கு ஏற்பனவாக வழங்கி ஆடுதலினும் பாடுதலினும் அழகினும் சிறந்தோர்களாகிய தோழிமார்களையும் இருகூறாக வகுத்து இருவர்க்கும் வழங்கி; என்க.
 
(விளக்கம்) தேவி விருத்தி - தேவிமார்க்கு வழங்கும் சீவிதம். ஆடலும் பாடலும் அணியினு மிக்கோர் சேடி மாரையும் என்னும் இத்தொடர், 'ஆடலும் பாடலும் அழகுங்காட்டி' எனவரும் மணிமேகலையினையும் (18 - 104) 'ஆடலும் பாடலும் அழகுமென்றிக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்' எனவரும் சிலப்பதிகாரத்தையும் (3 : 8 - 9) நினைவூட்டுகின்றது.